ஐஜேகேவில் இருந்து அதிமுகவிற்குள் வந்த வேகத்திலேயே கட்சிப்பொறுப்பு வழங்கப்பட்டு, தேர்தலில் வாய்ப்பும் கிடைத்து எம்.எல்.ஏவாகிவிட்டார் லீமார் ரோஸ் மார்ட்டின். சண்முகம், வேலுமணி அணியில் முக்கிய பங்கு வகித்தவர் லீமா. வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்த எடப்பாடி, லீமா மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வியை சண்முகம் ஆதரவாளர்கள் எழுப்பி வரும் நிலையில் அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமியும் அதே கேள்வியை எழுப்புகிறார். மேலும், லீமாவின் குற்றப்பின்னணியை விவரித்து அப்படி இருக்கும் சூழலில் அவர் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை? என்று கேள்விகளால் எடப்பாடியை துளைத்தெடுத்துக்கிறார் கேசிபி.

’’அதிமுகவிற்குள் இருக்கும் மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பவர் லீமா ரோஸ். ஐ.ஜே.கே கட்சியில் இருந்து விலகிய லீமா ரோஸ், உடனடியாக அதிமுகவில் இணைகிறார்; வந்த வேகத்திலேயே அவருக்கு மகளிர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு, லால்குடி தொகுதியில் எம்.எல்.ஏ சீட்டும் கொடுக்கப்பட்டு வெற்றியும் பெறுகிறார்.
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலேயே செய்தியாளர்களிடம் லீமா ரோஸ் மார்ட்டின் கூறுகிறார்; கூட்டணி முடிவுகள் குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்ற சர்ச்சை வெடித்தது.
கட்சிப் பிளவின் போது எஸ்.பி. வேலுமணி – சி.வி. சண்முகம் அணிக்கு பின்னணியில் இருந்தவர் லீமா ரோஸ்தான் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட நிலையில், வேலுமணி – சண்முகம் தரப்பைச் சேர்ந்த பலரது கட்சிப் பதவிகளைச் சமரசமின்றிப் பறித்த எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸின் பதவியை மட்டும் பறிக்காமல் இன்னமும் பாதுகாப்பதன் பின்னணி என்ன? என்ற கேள்வி எழுகிறது.
லீமா ரோஸ் மீதான குற்றச்சாட்டுகள் வெறும் உட்கட்சிப் பூசலோடு நின்றுவிடாமல், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணப்பரிமாற்ற வழக்காக உருவெடுத்து, தற்போது எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

2024-ல் இலங்கைக்குப் படகு மூலம் கடத்த முயன்ற 109 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டது; அதற்கு அடுத்த சில வாரங்களில் சென்னையில் இருந்து மதுரை சென்ற ரயிலில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப்பொருள் சிக்கியது; கேரளாவில் இயங்கும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இதனைக் கண்டுபிடித்தது. இந்தக் கடத்தலின் பின்னணியில் உள்ள பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜான் பிரிட்டோ, லீமா ரோஸ் மார்ட்டின், அவரது மகள் உட்பட 16 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கின் முதல் குற்றவாளியான ஜான் பிரிட்டோ, லீமா ரோஸின் சொந்த அண்ணன் என்பதும், அவர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், கடந்த வாரம் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

அதேபோல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரசாத் என்பவரையும் கட்சியில் சேர்த்து, அவருக்கு மாநில ஐ.டி விங்கின் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் போன்ற தேச விரோத குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களின் பின்னணியை விசாரிக்காமல்தான் கட்சியில் சேர்த்தீர்களா? அல்லது அவர்களின் அசுரத்தனமான பணபலத்தைப் பார்த்து மண்டியிட்டீர்களா? என்ற கேள்வி உலுக்குகிறது.’’



