சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட புதிய காற்று கசிவு காரணமாக, அங்கிருந்த விண்வெளி வீரர்களை அவசரமாக வெளியேற தயாராகுமாறு விடுக்கப்பட்ட உத்தரவை நாசா (NASA) தற்போது வாபஸ் பெற்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்கி வருகின்றன. இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் திடீரென ஒரு புதிய விரிசலும், அதன் காரணமாக காற்று கசிவும் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதுகாப்பு கருதி, அங்கிருந்த விண்வெளி வீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களின் விண்கலத்திற்குள் தஞ்சம் புகுந்து, அவசரகால வெளியேற்றத்திற்குத் (Evacuation) தயாராக இருக்குமாறு நாசா முன்னெச்சரிக்கை உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ரஷ்யக் குழுக்கள் (Russian teams) நிலைமையைக் கட்டுப்படுத்த தீவிரமாகவும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டன. தற்போது அந்த காற்று கசிவு தற்காலிகமாக வெற்றிகரமாக அடைக்கப்பட்டு, பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளது.
பிரச்சனை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் விண்கலத்திலிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கை உத்தரவை அமெரிக்காவின் நாசாவும், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) அமைப்பும் கூட்டாக வாபஸ் பெற்றுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, விண்வெளி வீரர்கள் அனைவரும் மீண்டும் தங்களின் வழக்கமான பணிகளுக்குத் திரும்பியுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் கடந்த 27 ஆண்டு கால வரலாற்றில், விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இதுபோன்ற எச்சரிக்கை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது மிகவும் அரிதான ஒன்று என்றும், இதுவரை வீரர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டதில்லை என்றும் விண்வெளி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.(Online Tamil News)


