அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர் தனபால். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தன்னை கட்சியினர் புறக்கணிக்கின்றனர் என்று ஜெயலிதாவிடம் வருந்தியதாகவும், இதனால் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் வைக்கும்படி, சட்டப்பேரவையில் முதன்மை அதிகாரம் படைத்த சபாநாயகர் பொறுப்பு வழங்கியதாகவும் தகவல்.

நடந்த சட்டமன்ற தேர்தலில் தனபாலுக்கு சீட் கொடுக்காமல் புறக்கணித்துவிட்டார் எடப்பாடி. இதனால் அவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் இணைந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு 74,808 வாக்குகள் பெற்று 14,511 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர் இன்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரானார். இந்த பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்தார் தனபால்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’அதிமுகவில் என்னை புறக்கணித்தார்கள். அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. அதனால் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டேன். அதிமுகவில் இருந்து விலகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. மனம் நொந்து விலகி இருக்கிறேன். அதிமுகவில் செய்த தவறை அனுபவிக்கிறார்கள். உடல்நலம் சரியில்லாததால் ஓய்வில் இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.



