போர்வாளை ஏந்தி நிற்கிறது அதிமுக. நமது எம்.ஜி.ஆர்., நமது அம்மா ஆகிய இரண்டு நாளிதழ்களும் கைவிட்டு சென்றபின்னர் போர்வாள் தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு என்பது அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதனால் அக்கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களை பறிகொடுத்து நிற்கிறது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்தது ‘நமது எம்.ஜி.ஆர்.’ ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இது டிடிவி தினகரன் வசம் சென்றது. இதனால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக உருவானது ‘நமது அம்மா’. நமது அம்மா எஸ்பி வேலுமணியால் இயங்கி வந்தது. ஆனால், நிறுவனர் : எடப்பாடி கே.பழனிசாமி என்றுதான் இருந்தது.

இந்நிலையில், அதிமுகவில் மேலும் ஏற்பட்ட பிளவில் சண்முகம், வேலுமணி இருவரும் தனி அணி அமைத்திருப்பதால் அவர்கள் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தொடர்பான செய்திகள் நமது அம்மா நாளிதழில் புறக்கணிக்கப்பட்டன. நிறுவனர்: எஸ்.பி.வேலுமணி என்று அச்சிட்டனர்.

இதனால், அதிமுகவுக்கு என்று மீண்டும் ஒரு அதிகாரப்பூர்வ நாளிதழ் தேவை என்ற நிலை ஏற்பட்ட நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக வெளிவந்திருக்கிறது ‘போர்வாள்’. இதை எடப்பாடி பழனிசாமி வெளியிட அதிமுக நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.



