மெட்டா (Meta), அமேசான் (Amazon) மற்றும் ஆரக்கிள் (Oracle) போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் செலவுகளைக் குறைக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு மாறவும் உலகளவில் புதிய பணிநீக்கங்களை அறிவித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் மட்டும் 140-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து 1,10,000-க்கும் அதிகமான ஊழியர்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கை அமெரிக்காவில் H-1B விசா மூலம் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்களின் வாழ்க்கையை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அமெரிக்க குடிவரவு விதிகளின்படி, H-1B விசா வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தனது வேலையை இழந்தால், அடுத்த 60 நாட்களுக்குள் (Grace Period) அவருக்கு விசா ஸ்பான்சர்ஷிப் வழங்கக்கூடிய மற்றொரு புதிய நிறுவனத்தில் அவர் பணியில் சேர வேண்டும். அவ்வாறு 60 நாட்களுக்குள் புதிய வேலையைக் கண்டறியத் தவறினால், அவர் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது சட்டமாகும்.

நீண்ட காலமாக அமெரிக்காவில் வசித்து, அங்கேயே வீடு வாங்கி, தங்களின் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்து முழுமையாகக் குடியேறியுள்ள இந்தியக் குடும்பங்களுக்கு இந்த 60 நாட்கள் கெடு என்பது மிகப்பெரிய மன உளைச்சலையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த 60 நாட்கள் காலக்கெடுவுக்குள் புதிய வேலை கிடைக்காத ஊழியர்கள், தங்களின் அமெரிக்க குடியுரிமையை தற்காலிகமாக நீட்டிப்பதற்காக பி-2 (B-2 Visitor Visa) சுற்றுலா விசாவிற்கு மாற முயற்சித்து வருகின்றனர். இதன் மூலம் மேலும் 6 மாதங்கள் அங்கு தங்கி வேலை தேட முடியும். ஆனால், தற்போதைய அமெரிக்க குடிவரவுச் சூழலில் இந்த வழியும் மிகவும் கடினமாக மாறியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். H-1B பிரிவில் இருந்து பி-2 பிரிவிற்கு மாற விண்ணப்பிப்பவர்களிடம் கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படுவதோடு, விசா நிராகரிப்புகளும் (Visa Denials) கணிசமாக அதிகரித்துள்ளன.
அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமைக்கான ‘கிரீன் கார்டு’ (Green Card) பெறுவதில் ஏற்கனவே பல ஆண்டுகள் இந்தியர்களுக்குத் தேக்கநிலை நிலவி வரும் சூழலில், இந்தத் தொடர் பணிநீக்கங்கள் அவர்களின் எதிர்காலக் கனவைச் சிதைத்துள்ளன.(Online Tamil News)



