அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். எங்கள் பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமிதான். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. கட்சியை உடைக்கும் எண்ணமில்லை. கருத்து வேறுபாடு மட்டுமே இருந்தது.
தவெகவிடம் அமைச்சர் பதவி கேட்டதாக எங்களைப் பற்றி தவறாக எழுதி வருகிறார்கள். நாங்கள் அமைச்சரவையில் இடம் கேட்டதாக தவெகவும் கூறவில்லை. தவெகவுக்கு ஆதரவளித்தது பதவிக்காக அல்ல. எங்கள் மீது அவதூறு பரப்புவதற்கென்றே டீம் வைத்திருக்கிறார்கள். மீண்டும் ஜெயலலிதா ஆட் சி அமைய பாடுபடுவோம் என்று எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடையே கூறுகிறார்.

நேற்று வரைக்கும் அதிமுகவை உடைக்க முயற்சி செய்த வேலுமணி டீம், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போன அதிருப்தியில் மீண்டும் அதிமுக பக்கம் திரும்புகிறது.
தனக்கு எதிரானவர்களை அடையாளம் காணும் பொருட்டு மீண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டி இருக்கும் சூழலில் வேலுமணி இப்படி அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.

இத்தனை நாளும் முன்னின்று முழங்கி வந்த சி.வி.சண்முகம் இன்றைக்கு எங்கே? ஏன் வேலுமணி முன்னின்று பேசுகிறார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகம் இரண்டையும் வேலுமணி, சண்முகம் கைப்பற்றிக்கொண்டதில் அதிமுகவுக்கு என்று போர்வாள் நாளிதழ் உருவெடுத்திருக்கிறது. இந்த அளவுக்கு சென்ற பின்னர் இரு அணிகள் உறுதி ஆன நிலையில் எதிர்காலம் கருதி மீண்டும் தாய்க்கூடு திரும்புகின்றனவா பறவைகள்?



