தமிழக வெற்றிக்கழகத்தின் வியூக வகுப்பாளராக இருந்து வந்த ஜான் ஆரோக்கியசாமி முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்.
யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனி நபர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் வியூகம் வகுத்துக் கொடுத்து வருபவர் ஜான் ஆரோக்கியசாமி. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஜான் ஆரோக்கியசாமி. ஆந்திராவில் பிறந்திருந்தாலும் படித்தது வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சென்னை லயோலா கல்லூரியில் தொழில் மேலாண்மை முதுகலை பட்டமும் பெற்றவர்.

படிப்பை முடித்ததும் பர்பெக்ட் ரிலேசன்ஸ் நிறுவனத்தில் மேலாளராக 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அடுத்து குட் ரிலேஷன்ஸ் இந்தியா நிறுவனத்தில் இயக்குநராக 12 ஆண்டுகள் பணி. ஆப்பிள் நிறுவனத்தில் பிராண்டிங் பிரிவின் முக்கிய அதிகாரியாக இருந்து இந்தியாவில் ஆப்பிள் போன்களின் இந்திய மார்க்கெட்டுக்கு வியுகம் வகுத்துக் கொடுத்தவர் ஜான். பின்னர் 2017ல் பெர்சோனா எனும் Persona. Leadership Advisory Pvt Ltd, சொந்த நிறுவனத்தை தொடங்கினார். 2021 வரையிலும் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். இதன் பின்னர் அவர் தொடங்கியதுதான் JPAC–PERSONA நிறுவனம்.
பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் போல், கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் கனகோலு போல் ஆந்திராவைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமியும் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரபலம் அடைந்தார்.

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 2017 மும்பை மாநகராட்சி தேர்தலிலும் சிவசேனா கட்சிக்காக வியுகம் வகுத்த குழுவில் இருந்தவர் ஜான். 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் சித்தராமையாவுக்கான வியூகம் வகுத்த குழுவில் இடம்பெற்றவர் ஜான். டெல்லியில் ஆத் ஆத்மிகான வியூகக் குழுவிலும் இடம்பெற்றவர் ஜான். 2016 தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு வியூக வகுப்பாளராக வந்தார் ஜான். அந்த தேர்தலில் அன்புமணியை பாமகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது பாமக. ’மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்று ஹைடெக்கில் அமைந்திருந்தது அன்புணியின் பிரச்சாரங்கள். மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பேசப்பட்டது. அந்த தேர்தலில் அன்புமணி முதல்வர் ஆகிவிடுவார் என்று பாமக பெரிந்தும் நம்பி இருந்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் ‘இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி’ என்று நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் வியூக வேலைகள் செய்தார் ஜான். அதன் பலனான தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது நாம் தமிழர் கட்சி.

அதிமுகவின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு பிராண்டிங் வேலைகளும் செய்துள்ளார் ஜான்.
இதன் பின்னர் விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருப்பது தெரிந்ததும் அவருக்கு பணியாற்ற தொடங்கினார் ஜான். தவெக தொடங்கும் ஆலோசனையில் இருந்து தற்போது முதலமைச்சர் நாற்காலியில் விஜய் உட்கார்ந்திருப்பது வரையிலும் ஜான் ஆரோக்கியசாமியின் பங்கு பெரிது என்கிறது பனையூர் வட்டாரம்.
விஜய்க்கு தவறாக வியூகங்கள் வகுத்துக் கொடுப்பதாகவே 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் பேச்சு இருந்தது. ஆனால் அவர்கள் நினைத்த தப்புத்தாளங்களே தவெக ஆட்சிய அமைய காரணங்களாகிவிட்டன.

தான் ஆட்சியில் அமர்வதற்கு, கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடிக்க ஆலோசனைகள் சொல்லி வந்த ஜான் ஆரோக்கியசாமியை தனது ஆலோசகராக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய்.



