ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உக்கிரமான போரால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலால் சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நாடுகள் கடும் பொருளாதார இன்னல்களைச் சந்தித்து வருகின்றன.
இக்கட்டான இந்தச் சூழலில், ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் 5 நாட்களுக்குப் போரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மேலும், ஈரான் தனது நிபந்தனைகளுக்கு அடிபணிந்துவிட்டதாகத் தெரிவித்த டிரம்ப், தற்போது அந்த அவகாசத்தை 10 நாட்களாக (ஏப்ரல் 6, 2026 வரை) நீட்டித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய தரைவழித் தாக்குதலுக்கான திட்டத்தை அமெரிக்கா வகுத்து வருவதாகத் தெரிகிறது. ‘ஆக்சியோஸ்’ அறிக்கையின்படி, அமெரிக்கா நான்கு முக்கிய இலக்குகளைக் குறிவைத்துள்ளது. முதலாவதாக, ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் கார்க் தீவைக் கைப்பற்றி அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவது அமெரிக்காவின் முதன்மைத் திட்டமாகும். இதனை முன்கூட்டியே மோப்பம் பிடித்துள்ள ஈரான், கார்க் தீவை ஒரு பலமான கோட்டையாக மாற்றியுள்ளது.
தீவைச் சுற்றிலும் கண்ணிவெடிகளைப் புதைத்தும், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் கூடுதல் வீரர்களைக் குவித்தும் ஈரான் தனது தற்காப்பை பலப்படுத்தியுள்ளது. ஒருவேளை அமெரிக்கா எல்லை மீறினால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் உட்கட்டமைப்புகள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
இரண்டாவதாக, உலகளாவிய கடல்வழிப் போக்குவரத்தைத் தீர்மானிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியின் மையப்பகுதியான லாரக் தீவைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா திட்டமிடுகிறது. இதன் மூலம் ஈரானின் கடற்படை நடவடிக்கைகளை முழுமையாகக் முடக்க முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

மூன்றாவதாக, ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் உள்ள அபு மூசா மற்றும் அதனைச் சார்ந்த சிறிய தீவுகளைக் கைப்பற்றி, பாரசீக வளைகுடாவுக்குள் நுழையும் அனைத்துக் கப்பல்களையும் கண்காணிக்கவும் தடுக்கவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. நான்காவதாக, ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்குள் நேரடியாக ஊடுருவி அங்கிருக்கும் அணுப் பொருட்களைக் கைப்பற்றுவதன் மூலம், ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுப்பதைத் தடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவே அமெரிக்கா ஆயிரக்கணக்கான வீரர்களை ஈரான் எல்லைக்கு அருகே குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. வெளியுலகிற்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பது போலத் தெரிந்தாலும், ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் உடனடியாகத் தரைவழித் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா தயாராக உள்ளது. ஈரானும் தனது தரப்பில் தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதால், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிக்குப் பிறகு இந்தப் போர் எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்பது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.(Online Tamil News)