தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் கூட்டணிகள், தேர்தல் தயாரிப்புகள் மற்றும் சின்ன ஒதுக்கீடுகள் என அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பொதுச் சின்னம் வழங்கக் கோரி தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அதில் விசில், கால்பந்து, வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்கள் விருப்பப் பட்டியலாக வழங்கப்பட்டிருந்தன. அவற்றில் முதன்மையான விருப்பமாக இருந்த விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் தவெகவுக்கு ஒதுக்கியுள்ளது.(Online Tamil News)
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட இந்த சின்ன ஒதுக்கீடு உதவும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் மற்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் என்றும், இந்த சின்ன ஒதுக்கீடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் வேறு சில கட்சிகளுக்கு இந்த சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது காலியாக இருந்த நிலையில் தவெகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், கமல்ஹாசன் (Kamal Haasan) தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் ‘டார்ச் லைட்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இதே சின்னத்தில் அந்தக் கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.