ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்ததில் ஓபிஎஸ் அணியில் இணைந்தார் குன்னம் ராமச்சந்திரன். ஓபிஎஸ் ஒரு முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகினர். இதில் வைத்திலிங்கத்தை அடுத்து குன்னம் ராமச்சந்திரனும் விலகி சென்று இன்றைக்கு திமுகவில் இணைவதாக இருந்தது. அதற்கான எல்லாம் ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென்று திமுகவில் இணையும் முடிவை மாற்றிக்கொண்டார்.
இது குறித்து அவரே வீடியோ மூலம் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், ‘’திமுகவில் இணைவது என்று நேற்றைய தினம் கூடி முடிவெடுத்ததில் இருந்து பின்வாங்குகிறேன். நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்பது தவறான விசயம்தான். வேறு வழியில்லை. என் உடல்நலத்தின் மீதான மருத்துவர் ஆலோசனையின் காரணமாகவும், குடும்ப எதிர்ப்பின் காரணமாகவும் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன். பொதுவாழ்வில் இருந்து விலகுகிறேன். குடும்ப நிம்மதிக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

திமுகவில் சேருவது என்று பேசிமுடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது வீட்டில் என் சொந்தங்கள் அனைவரும் கூடியிருந்தார்கள். அப்போது குடும்பத்தினர் சொன்னதில் இரண்டு விசயங்கள் என் மனதை வாட்டியது. ஜெயலலிதாவின் புகைப்படத்தை வீட்டில் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் அகற்றுவாயா? என்று என்னைப் பெற்றெடுத்த தாய் கேட்டார். எனக்கு அசிங்கமாக இருக்கிறது, இதுவெல்லாம் வேலையாப்பா என்று என் மகள் கேட்டார். இதனால் இரவு முழுவரும் தூங்க முடியாமல் தவித்தேன்.
நான் எந்த அரசியில் கட்சியிலும் இனி பயணிக்க மாட்டேன். அண்ணன் வைத்திலிங்கம் அவர்களும், என்னோடு பயணித்த கழக தொண்டர்களும் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’’என்று கூறியிருக்கிறார்.



