கட்சி தொடங்கியது முதல் ஆளுங்கட்சியை பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்த விஜய் ஒரு முறை கூட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காத விஜய் இப்போது பதில் அளித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறார் திக தலைவர் கி.வீரமணி.
இது குறித்த அவரது அறிக்கை: ’’தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வெளிவந்துவிட்டன. இது தமிழ்நாட்டு வாக்காளர்கள் தந்த அதிர்ச்சியான முடிவுகள் என்பது உண்மை என்றாலும், இது முதிர்ச்சியான முடிவுகள் அல்லவே என்று உலகம் கேள்வி எழுப்பும் நிலைதான். என்றாலும், மக்கள் நாயகமான ஜனநாயகத்தில் பல நேரங்களில் இப்படிப்பட்ட தேர்தல் தீர்ப்புகள் வருவது உண்டு.

சில நேரங்களில், நீதிமன்றத் தீர்ப்புகளே கூட ஏற்க முடியாத வகையில், நல்ல தீர்ப்புகளாக அமையாதபோதுகூட, அதனை ஏற்பதுதான் முறையானது என்ற உண்மைபோல, மக்கள் மன்றத் தீர்ப்பையும் ஏற்பதே ஜனநாயகத்திற்கான தனித்தன்மையாகும்.
அதன்படி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சிறந்த நடிகர் என்று திரையுலக நாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜோசப் விஜய்க்கும், அவரது கட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஜனநாயக மரபுக்கேற்ப நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுவும் இளையர்களின் மோகத்தின் மாற்றம் என்ற பெயரில் இது நிகழ்ந்திருந்தாலும், திரைக் கவர்ச்சி அறுவடையாகும் இது, ஒரு கவர்ச்சிப் புயலாகி, தமிழ்நாட்டில் அடித்துள்ளது!’

மக்களின் விருப்பம் என்பது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் அரசியலில் இது ஒரு முக்கிய திருப்பம். 2 ஆண்டுகால கட்சியின், நிறுவனராக, ஆளுங்கட்சியை நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்ட நிலை இனி மாறி, மற்றவர்களின் கேள்விகளுக்கு, குறிப்பாக தி.மு.க.வும், அரசியல் தெளிவுள்ள அறநெறியாளர்களும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு இந்த ஜனநாயகத் தீர்ப்பின்மூலம் தள்ளப்பட்டு இருக்கிறார் முதலமைச் சராகவிருக்கும் த.வெ.க. தலைவர்!’’



