பிரதமர் மோடியை பெண் எம்.பிக்கள் தாக்க முற்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அன்று மக்களவையில் என்ன நடந்தது என்ன? என்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவையில் கடந்த 28ம் தேதியில் இருந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி அன்று பிரதமர் மோடி அவைக்கு வருவதற்கு முன்பாக எதிர்க்கட்சி பெண் எம்.பிக்கள் பிரதமர் இருக்கைக்கு அருகில் சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தில் இருக்கும் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பேச மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நேரத்தில் இந்த அமளியினால் மோடி வரவில்லை.
உடனே, ’’பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளன. அதனால் எதுவும் தவறாக நடந்து விடக்கூடாது என்பதாலேயே பிரதமர் மோடியை இன்று அவைக்கு வர வேண்டாம் என்று சொன்னேன். அவர் வந்து அசம்பாவீதம் நடந்திருந்தால் மக்களவைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கும் ’’ என்றார் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா.

’’பயங்கரவாதிகள் பெண்கள், குழந்தைகளை பயன்படுத்துவது போன்று பெண் எம்.பிக்களை முன்னேவிட்டு பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சியினர் அனுப்பி இருக்கிறார்கள். ’’ என்று பாஜகவினரும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கின்றன என்று பிரதமர் மோடியும் குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வரலாற்றில் இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது இதுவே முதல்முறை என்பதால் பெரும் விவாதப் பொருள் ஆனது இந்த விவகாரம்.
இந்நிலையில் அன்று மக்களவையில் நடந்தது என்ன? என்பது குறித்து வீடியோவை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

அந்த வீடியோவில், பிரதமர் இருக்கைக்கு அருகே சென்று காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இதனால் அப்போது பாஜக எம்பிக்களுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வீடியோவை வெளியிட்ட கிரண் ரிஜிஜூ, அன்றைக்கு பெண் எம்பிக்களை பாஜக எம்பிக்கள் தடுக்காமல் இருந்திருந்தால் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கும் என்கிறார்.



