காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (09/04/2025) நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா்.
குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருச்சுணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 இல் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அனந்தகிருட்டிணன். குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன் பின்னாளில் குமரி அனந்தன் ஆனது. மறைந்த தொழில் அதிபர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் எச். வசந்தகுமார் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு 4 மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவரும், அரசியல்வாதியும், முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்காணா ஆளுநரும் ஆவார்.
தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றிருந்த இவா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பதவி வகித்தார். 1965-ஆம் ஆண்டு தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் அமைப்பாளா் பொறுப்பு வழங்கப்பட்டது. சிற்றூரும் விடாமல், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞா் காங்கிரஸ் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.
1977-இல் மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகா்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
சாத்தான்குளம், ராதாபுரம், திருவொற்றியூர் தொகுதிகளில் இருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக 4 முறை தோ்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் தமிழில் வினா தொடுக்கும் உரிமையை இந்தியாவில் முதல்முறையாகப் போராடி பெற்றுத் தந்தவா்.
அஞ்சலகத் துறை படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று போராடிப் பெற்றார்.
காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், மாணவா் காங்கிரஸ் என இரு கட்சிகளைத் தொடங்கினாா். வெவ்வேறு காலகட்டங்களில் அக்கட்சிகளை காங்கிரஸில் இணைத்தாா்.
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பாத யாத்திரை, உண்ணாவிரதம் என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவா். மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் வர காரணமாக இருந்தவர்.
காமராசரின் சீடராக விளங்கியது மட்டுமின்றி, 2021 ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதை 2022 இல் பெற்றார். தொடர்ந்து, அவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி அவருக்கு 2024 இல் ‘தகைசால் தமிழா்’ விருதை வழங்கி தமிழக அரசு கெளரவித்தது
2008-ஆம் ஆண்டு பனை மேம்பாட்டு வாரியத் தலைவராக குமரி அனந்தனை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி நியமித்தாா்.
கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்பட 29 நூல்களின் ஆசிரியர்.