தமிழ்நாட்டில் 1937 முதல் 1939 வரையிலும், 1964 முதல் 1967 வரையிலும் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன. பலர் சிறைக்குச் சென்றார்கள். சிறைக் கொடுமையால் உயிரிழந்த நடராசன்-தாளமுத்து இருவரின் பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கிறது. தீக்குளித்தும், விஷம் குடித்தும், போலீஸ் மற்றும் துணை ராணுவத்தின் துப்பாக்கிக்கு பலியாகியும் உயிரிழந்த இளைஞர்கள் பட்டியல் நீளமானது. தாய்மொழியைக் காக்கவும், ஆதிக்க மொழியை எதிர்க்கவும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டம் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது.
அப்போது, இந்தியை ஆதரித்துப் பேசிய தமிழ்நாட்டுவாள்கள், “இந்த தலைவனுங்களை நம்பி இவனுங்க இந்தியை எதிர்க்குறானுங்க. நாளைக்கு இவனுங்க பொழைப்பு தேடி, பம்பாய்க்கு போனா இந்தி தெரியாம எப்படி பிழைப்பானுங்க?” என்று கேலியும் கிண்டலுமாக இந்தியை ஆதரித்துப் பேசினார்கள். அந்த பம்பாய் இப்போது மும்பை ஆகிவிட்டது. அதுதான் மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் தலைநகர். அந்த மாநிலத்தின் தாய்மொழி, மராத்தி. ஆனால், இங்கே உள்ளவர்கள் அப்போது சொன்னதுபோல இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தவர்கள் பம்பாய் என்கிற மும்பையின் சொந்த மொழி இந்தி என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
காரணம், இந்தி திரைப்படவுலகமான பாலிவுட்டின் தலைநகரமும் பம்பாய் என்கிற மும்பைதான். இந்தியாவின் முக்கியமான வணிகத் தலமும் அதுதான். அதனால், இந்தி அங்கே சரளமாகப் புழங்கியது. தமிழ்நாட்டிலிருந்து இந்தி தெரியாமல் அங்கே போனால் எப்படி பிழைப்பு நடத்த முடியும் என்ற கேள்வி மூலம், நமது மண்ணில் நடந்த மொழிப் போராட்டத்தை இழிவு படுத்தினார்கள். மொழிப் போராட்டத்திற்கு முன்பும் பின்பும் தமிழர்கள் பலர் மும்பைக்குச் சென்றுள்ளனர். தாராவி போன்ற பகுதிகளில் அவர்கள் நிறைந்து வாழ்ந்தனர். இந்தி தெரிந்து அங்கே போனவர்கள் குறைவு. அங்கே போன பிறகு இந்தியைத் தெரிந்துகொண்டு பேசியவர்கள் அதிகம். இவ்வளவுதான் ஒரு மொழிக்கானத் தேவை.
இதற்கு மாறாக, இந்தி மொழிதான் இந்தியாவின் தேசிய மொழி என்றும் அது தெரியாமல் எப்படி ஒருவர் மும்பைக்கு போக முடியும், வேலை பார்க்க முடியும் என்று இங்கே பலர் உருட்டிக் கொண்டிருந்த நேரத்தில்தான், மராட்டிய மாநிலத்தின் மண்ணின் குரலுடன் சிவசேனா என்ற இயக்கம் உருவானது. அது மொழி, மதம் எனப் பல தளங்களில் தீவிரம் காட்டியது. மும்பையிலும் மராட்டியத்தின் பிற பகுதிகளிலும் வாழும் மற்ற மாநிலத்தவர்கள் மீது வெறுப்பைக் காட்டி, தாக்குதல் நடத்திய காலமும் உண்டு. தேர்தல் அரசியலில் ஈடுபட்ட பிறகு அந்த வீரியம் சற்று குறைந்தது.
சிவசேனாவின் தோளில் ஏறி மராட்டியத்தில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க, தனக்கேயுரிய வழக்கத்துடன் சிவசேனாவை இருகூறாகப் பிளந்தது. ஒரு பகுதியைத் தன் ஆதரவில் வைத்துக்கொண்டு ஆட்சியையும் பிடித்தது. மகாராஷ்ட்ரா மாநில பா.ஜ.க. அரசு, மத்திய பா.ஜ.க. அரசின் தேசியக் கல்விக்கொள்கை 2020ன்படி பள்ளிக்கூடங்களில் மூன்றாவது மொழியாக இந்தி மொழிக் கட்டாயம் என்று அரசாணை வெளியிட்டது. இதை அந்த மாநில அரசின் கல்விக்குழுத் தலைவரே கடுமையாக எதிர்த்தார். சிவசேனாவின் மற்றொரு பிரிவு, இந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்றது. மற்ற கட்சிகளும் மூன்றாவது மொழியாக ஆரம்ப பாடசாலையிலிருந்தே இந்தியைத் திணிப்பதை ஏற்க முடியாது என்றன. அந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக அறிவித்த மராட்டிய மாநில பா.ஜ.க. அரசு, “மூன்றாவது மொழி கட்டாயப் பாடமல்ல. விருப்பப் பாடமாக இந்தி கற்றுத்தரப்படும்” எனப் புதிய அரசாணையை வெளியிட்டது. அதற்கும் கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது.
சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்டிரா மாநில பா.ஜ.க.வினரிடமிருந்தே எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியின் தொடர்ச்சியான ஆதிக்கத்தினால் தங்கள் தாய்மொழியான மராட்டிய மொழி மக்களின் பயன்பாட்டிலிருந்தே அழிக்கப்பட்டுவிடும் என்பதுதான் அங்குள்ள அனைவரின் அச்சமாகும். கட்சி கடந்த இந்த அச்சமும், மொழியுணர்வும் மாநில பா.ஜ.க அரசைப் பணிய வைத்தது. புதிய அரசாணையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்விக் குழு அமைக்கப்பட்டு, அதன் ஆலோசனையின் பெயரில் இந்தி மொழி பற்றி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்தியால் அழிந்த மொழிகளின் சோக வரலாறு நிறைய உண்டு. தமிழ்நாடுதான் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே விழித்துக்கொண்டு, இந்தியைத் தடுத்து, தாய்மொழியைக் காத்தது. ஆதிக்கத்தை எதிர்க்கும் அந்த உணர்வு இப்போது மராட்டியத்திலும் எழுந்துள்ளது. பா.ஜ.க. ஆளும் மற்ற மாநிலங்களிலும் இது தொடரும்.