இந்திய உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு அந்த நீதிமன்றத்தில் நடைமுறைக்கு வருவதற்கே 33 ஆண்டுகள் ஆகியுள்ளது. Beter late than never என்பார்கள். அந்த வகையில், இது வரவேற்பிற்குரியதுதான். உச்சநீதிமன்றத்தில் நேரடியாக நியமிக்கப்படும் பணியாளர்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற உத்தரவுதான் இது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் உத்தரவிட்டதையடுத்து, இதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. சமூக நீதிப் பயணத்தில் இது மற்றொரு மைல்கல் என்று சொல்லலாம்.
பட்டியல் இன-பழங்குடி மக்களின் வாழ்ககை நிலையைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்திய அரசியல் சட்டம் வழங்குகிறது. சாதிப்படிநிலை காரணமாக உயர் குலத்தோரால் சமூக ரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. முதலில் காகா கலேகர் கமிஷன், பின்னர் பி.பி.மண்டல் கமிஷன் ஆகியவை அமைக்கப்பட்டு இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, தரவுகள் சேகரிக்கப்பட்டன.
மண்டல் கமிஷன் தன்னுடைய அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தும்கூட, பத்தாண்டுகளாக அது கிடப்பிலேயே போடப்பட்டிருந்தது. அதுகுறித்து, வடமாநில அரசியல் தலைவர்களைவிட, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூக நீதித் தலைவர்கள்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 1990ல் வி.பி.சிங் பிரதமரான போது, மண்டல் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசுப் பணிகளில் ஓ.பி.சி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பி.சி+எம்.பி.சி.) 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார்.
இது நாட்டை பிளவுபடுத்தும் என அவருக்கு எதிரான அரசியல் கட்சிகள் போராட்டங்களைத் தூண்டிவிட்டன. வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெற்றதால் ஆட்சி கவிழ்ந்தது. ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்திரா சஹானி என்ற பெயரிலான அந்த வழக்கில் 1992ல் தீர்ப்பளித்த 9 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ஓ.பி.சிக்கான இடஒதுக்கீடு செல்லும் எனத் தீர்ப்பளித்தது. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கான இந்த இடஒதுக்கீட்டின் அளவு 50% என்பதைத் தாண்டக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 22.5% இடஒதுக்கீடு ஏற்கனவே உள்ள நிலையில், ஓ.பி.சிக்கான இடஒதுக்கீடு 27% என நிர்ணயிக்கப்பட்தால் 50%க்கு உயராமல் இருந்தது. இது மத்திய அரசுப் பணிகளுக்கான இடஒதுக்கீடு. இதை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால்களைக் கடக்க வேண்டியிருந்தது. பல கட்டங்களில் நீதிமன்றத்தை நாடி, தெளிவானத் தீர்ப்பைப் பெற வேண்டியிருந்தது. தொடக்கத்தில் இதனை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்று நினைத்த அரசியல் சக்திகளால், உச்சநீதிமன்றத்தை மீறி எதையும் செய்ய முடியாது என்று தெரிந்ததாலும், ஓ.பி.சி.களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதால் அது அரசியல்ரீதியான தேர்தல் ஆதாயத்தையும் தரும் என்பதால் மத்திய அரசுப் பணிகள் பலவற்றிலும் மெல்ல மெல்ல இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் ஓ.பி.சிக்கான 27% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இவற்றில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும் வழிகாட்டுதல்களுமே முதன்மையான காரணமாக அமைந்தது.
எந்த உச்சநீதிமன்றம் சமூக நீதித் தீர்ப்பை வழங்கியதோ அந்த உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் தொடங்கி, எந்த ஒரு பணி நியமனத்திலும் இடஒதுக்கீடு என்பது கடைப்பிடிக்கப்படவில்லை. இது குறித்து பல்வேறு குரல்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கவன ஈர்ப்பைக் கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில்தான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், உச்சநீதிமன்றத்தில் நேரடியாக நியமிக்கப்படும் அனைத்து பணிகளிலும் பட்டியல் இனம், பழங்குடி இனம், ஓ.பி.சி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்ட அனைத்து வகை இடஒதுக்கீடையும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார்.
இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரண்டாவது தலைமை நீதிபதி கவாய். இந்திய சமூகத்தின் சாதிப்படிநிலை, சமூக ஒடுக்குமுறை இவற்றை அறிந்த பின்னணியிலிருந்து வந்தவர். அந்தப் புரிதலுடன் உச்சநீதிமன்றப் பணிகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முன்வந்திருக்கிறார். அவரது இந்த முன்னெடுப்புக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
1992ல் உச்சநீதிமன்றம் அளித்த இடஒதுக்கீட்டுத் தீர்ப்பு, 33 ஆண்டுகள் கழித்து 2025ல் உச்சநீதிமன்றப் பணிகளில் நடைமுறையாகிறது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையும் ஒரு காலத்தில் கனியும்.