திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அரசியல் களத்தில் சர்ச்சைகளையும் உருவாக்குவது இன்று நேற்று உருவானதல்ல. சினிமா என்பது மக்களிடம் போய்ச் சேரத் தொடங்கிய காலத்திலிருந்தே இது தொடர்கிறது. கல்கியின் தியாகபூமிக்கும், கலைஞரின் பராசக்திக்கும் தடைவிதிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பைத் தொடர்ந்து அந்தப் படங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்டன.
ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த காந்தி திரைப்படத்தில் டாக்டர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்களின் பங்களிப்புகள் இடம்பெறவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. மும்பையில் ஒரு தியேட்டரில் காந்தி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, பாம்புகளை பிடித்து உள்ளேவிட்டுவிட்டதாகவும், ரசிகர்கள் அலறியடித்து ஓடியதாகவும் பரபரப்பு செய்திகளும் வந்தன. இவையெல்லாம் படத்தின் மீதான மதிப்பீடுகள். சில படங்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களால் பெரும் நெருக்கடிகள் உருவாக்கப்படுவது உண்டு.
எமர்ஜென்சி காலத்தில் கிசா குர்சிக்கா இந்தப் படத்தின் படச்சுருளை ஆளுங்கட்சியினர் எரித்து படம் வெளிவர விடாமல் செய்தனர். விஜய் நடித்த தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வரிகள் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தால், ஆட்சியாளர்களின் கோபத்திற்குள்ளாகி, தன் அப்பாவுடன் நீலகிரி மலையேறி, கோடநாட்டில் காத்திருந்து, அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் தயவைப் பெற்று படத்தை வெளியிட வேண்டியிருந்தது. சர்க்கார் படம் உள்பட விஜய் நடித்த சில படங்கள் நெருக்கடிக்குள்ளாகி இருக்கின்றன. புகழ் பெற்ற டைரக்டரான மணிரத்னம் தனது பம்பாய் படத்தை சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவிடம் தனிப்பட்ட முறையில் திரையிட்டு அவரது அனுமதி கிடைத்தபிறகே வெளியிட்டார். இருவர் படத்தை கலைஞரிடம் திரையிட்டுக் காட்டிய பிறகே ரிலீஸ் செய்தார். குரு படத்தை தொழிலதிபர் அம்பானியிடம் திரையிட்டுக் காட்டினார். அதிகார சிக்கல்கள் ஏற்படும்போதும், அதிகார சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் இருப்பதற்கும் படக்குழுவைச் சார்ந்தவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
அண்மைக்காலமாகத் திரைப்படங்கள் மீதான மதவெறிப் பார்வையும் அதன் பின்னணியில் உள்ள அரசியலும் சினிமாவுலகத்தின் மீது மோசமான தாக்கங்களை உருவாக்கி வருகின்றன. மோகன்லால் நடித்த லூசிஃபர் படத்தின் இரண்டாவது பாகமாகக் கருதப்படும் எம்புரான் படம் அரசியல் நிகழ்வுகளை எதிரொலிக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் பலமாகியுள்ளன. பிரிதிவிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை அவரது மனைவி தயாரித்திருக்கிறார். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு கொடூரம், அதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களை குறிவைத்து, அரசு ஆதரவுடன் நடத்தப்பட்ட கொடூரக் கொலைகள், பில்கிஸ் பானு என்ற பெண்மணி பாலியல் கொடூரத்திற்குள்ளாகி, தன் பச்சிளம் குழந்தையையும் பறிகொடுத்த கொடுமை இவை காட்சிப்போக்கில் அமைக்கப்பட்டிருப்பதும், இதன் பின்னணியில் இருந்த அமைப்புகளை அடையாளப்படுத்தும் வகையிலான கதாபாத்திர பெயர்கள் இவற்றுக்கு எதிராக கேரளாவில் உள்ள இந்துத்வா அமைப்புகள் போராட்டங்களை நடத்த, பா.ஜ.க.வும் இந்த எதிர்ப்பில் பங்கெடுத்தது.
கேரள மாநில ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினரயி விஜயன், எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைவர்கள் எம்புரான் படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களின் கருத்துரிமைக்காக குரல் கொடுத்தபோதும், பா.ஜ.க. தரப்பின் எதிர்ப்பு தொடர்ந்ததால், படக்குழுவினர் தாமாக முன்வந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் வகையில் 20க்கும் மேற்பட்ட வெட்டுகளுடன் படத்தை வெளியிட முன்வந்தனர். படத்தின் கதாநாயகனான மோகன்லால், இந்தக் காட்சிகளுக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். இதை பா.ஜ.க. மற்றும் இந்துத்வா அமைப்புகள் தங்களின் வெற்றியாகக் கொண்டாடுகின்றன. எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்தும் தவறான சித்தரிப்புகளுடனான காட்சிகள் இருப்பதை தமிழ்நாட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஒரு படத்தின் காட்சிகளில் சித்தரிக்கப்படும் நிகழ்வுகள் ஒரு தரப்புக்கு விருப்பமானதாகவும், மற்றொரு தரப்பின் பார்வைக்கு எதிரானதாகவும் இருக்கும். கருத்துரிமை எந்தளவுக்கு படைப்பாளருக்கு இருக்கிறதோ, அதே ஜனநாயக வழியில் எதிர்ப்புரிமையையும் விமர்சனமாக வைக்க உரிமை உண்டு. ஆனால், இங்கே அதிகாரத்தின் மூலமும் வன்முறை மூலமும் கலைப் படைப்புகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கேரள முஸ்லிம்களை சர்வதேச தீவிரவாதிகளாக சித்தரித்த கேரளா ஸ்டோரியும், காஷ்மீர் நிலவரங்களை ஒருதலைபட்சமாக சித்தரித்த காஷ்மீர் ஃபைல்ஸ் படமும் பிரதமர் தொடங்கி மத்திய ஆட்சியாளர்களின் வெளிப்படையான ஆதரவுடனும், அவர்களே பிராண்ட் அம்பாசிடர்களாக இருந்து புரமோட் செய்யும் அளவிலும், வரிச்சலுகையுடன் திரையிடப்பட்டதை மறக்க முடியாது. மகாராஷ்ட்டிரா மாநிலம் நாக்பூரில் அண்மையில் நடந்த கலவரங்களுக்கும் வன்முறைகளுக்கும் பா.ஜ.க.வினரின் பெரும் ஆதரவுடன் வெளியான ‘சாவா’ என்ற படத்தில் ஔரங்கசீப் மன்னர் பற்றிய சித்தரிப்புகளே காரணமாக அமைந்தன.
காஷ்மீர் முதல் கேரளா வரை எந்தப் படம் ஓடவேண்டும், எது ஓடக்கூடாது என்பது ரசிகர்களின் கைகளில் இல்லை. மத்திய ஆட்சியாளர்களிடமும் அவர்களின் கட்சிக்காரர்களிடமும் உள்ளது.