இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த சுபான்ஷூ சுக்லா என்ற விண்வெளி வீரர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வெற்றிகரமாக சென்றடைந்திருப்பது, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் வழியாக வான்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ஜூன் 25 அன்று இந்தக் குழு பறந்தது.
சுபான்ஷூ சுக்லாவுடன் அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரும் சர்வதேச விண்வெளி மையத்தை ஏறத்தாழ 28 மணி நேரப் பயணத்திற்ப் பிறகு சென்றடைந்துள்ளனர். அவர்கள் 14 நாட்கள் விண்வெளியிலேயே தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். இவர்களின் பயணம் மே 29ந் தேதியே தொடங்கியிருக்க வேண்டும். பல்வேறு சூழல்களால் இந்தப் பயணம் ஏறத்தாழ 25 நாட்கள் தள்ளிப்போனதால் இந்திய விண்வெளி ஆய்வாளர்களிடத்திலும், ஆர்வலர்களிடத்திலும் பதற்றம் நிலவியது.
ஜூன் 25ல் ராக்கெட் புறப்பட்டபோது அதனைப் பார்த்த சுபான்ஷூவின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் அத்தனை மகிழ்ச்சி. இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளும் பதற்றம் தணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆக்ஸியம்-4 என்கிற இந்த மிஷனில் சுபான்ஷூ இடம்பெறுவதற்காக 548 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். இன்றைய விண்வெளிப் பயணம் என்பது சர்வதேச அளவில் போட்டி மிகுந்த சூழலில் இருப்பதால், இந்தியாவின் ககன்யான் மிஷன் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு, சுபான்ஷூவுக்கு 548 கோடி ரூபாயில் டிராகன் விண்கலத்திலும் சர்வதேச விண்வெளியிலும் சீட் ரிசர்வ் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது.
இந்தியர்களில் இதற்கு முன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டவர் ராகேஷ் சர்மா. அவரும் அசோக் மல்ஹோத்ரா என்பவரும் 1984ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் (ரஷ்யா) விண்கலம் மூலம் அப்போத விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டனர். அப்போது அது மிகப் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் விண்வெளி சாகசங்களில் போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரம். சோவியத் யூனியனின் ஸ்புட்னிக், அமெரிக்காவின் அப்போலோ விண்கலங்கள் உலகம் முழுவதும் பெயர் பெற்றதுடன் இந்தியாவில் டீக்கடைகள் முதல் மருத்துவமனைகள் வரை அந்த விண்கலத்தின்பெயர்களைக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் யூரி காகரின் விண்வெளியில் உலகத்தை சுற்றிய முதல் மனிதர் என்ற பெயர் பெற்ற நிலையில், நிலவில் கால் வைத்து அமெரிக்காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சாதனை படைத்தார்.
இரண்டு வல்லரசு நாடுகளுடன், வளர்ந்து வரும் நாடான இந்தியாவால் அந்தளவுக்குப் போட்டியிட முடியாது என்றாலும், விண்வெளி ஆராய்ச்சிகள், செயற்கைக்கோள் விண்கலம் ஏவுதல் போன்றவற்றில் இஸ்ரோ தொடர்ச்சியாகத் தனது பங்களிப்பை செய்து வந்தது. அதில் சந்திரயான் மிஷன் இந்தியளவில் முக்கியமான சாதனையாக அமைந்தது. மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகித்ததால் தமிழர்களிடையேயும் விண்வெளி சாகசம் குறித்த ஆர்வம் அதிகமானது.
சோவியத் யூனியன் சிதைந்து ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா உள்ளிட்ட 15 நாடுகளாகப் பிரிந்த நிலையில், விண்வெளி ஆய்வின் முன்னேற்றத்திற்காக அமெரிக்காவின் நாசா மையத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்பட்டது. இந்திய உயர் வகுப்பினர் நாசாவுடன் எளிதாக இணைந்தனர். அதன் விளைவாக, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு மேலே எந்த செயற்கைக்கோள் பறந்தாலும், சில நொடிகள் நிலைக்குத்தி நின்றுவிட்டுத்தான் நகர்கின்றன என்பது போன்ற கதைகளும் பரவின. இத்தகைய இந்தியத்தன்மைக்கு அப்பால், உண்மையான விண்வெளி ஆராய்ச்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிபர் பிடன் ஆட்சி முடிந்து, குடியரசு கட்சியின் அதிபர் டிரம்ப் ஆட்சி மீண்டும் அமைந்தபிறகு அனைத்து துறைகளிலும் தாறுமாறான சூழல்கள் ஏற்பட்டு வருகின்றன. தனியார் நிறுவனங்கள் விண்வெளி செயல்பாடுகளில் கோலோச்சத் தொடங்கியுள் சூழலில் தொழிலதிபர் எலன் மஸ்க்குக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான பிணக்குகளும் விண்வெளி ஆய்வுகள் ஒப்பந்தங்கள் தொடர்பான பல சந்தேகக் கேள்விகளை எழுப்புகின்றன. இதையெல்லாம் கடந்துதான் சுபான்ஷூ உள்ளிட்ட விண்வெளி நாயகர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஏற்கனவே உள்ளவர்களுடன் இணைந்து அந்தரத்தில் தொடங்கியபடி ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். சோதனைகளின்றி சாதனைகளில்லை.