உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் வாழ்ந்த மண் இது. மனிதர்களைப் போலவே மற்ற உயிரினங்களையும் கருதுகிற பண்பு தமிழ் மக்களுக்கு உண்டு. உயிரினங்களிடம் அந்த அன்பையும் பண்பையும் எதிர்பார்க்க முடியாது. காக்கையை அழைத்து சோறு வைக்கலாம். புலியைப் பக்கத்தில் கூப்பிட்டு கறியைக் கொடுக்க முடியுமா? புலிகளைப் போல மக்களை பயமுறுத்துகின்றன தமிழ்நாடு முழுவதும் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்கள்.
ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்புகள் மனிதர்களுக்கு நேரடியானப் பொருளாதாரப் பலன்களைத் தரக்கூடியவை. நாய் வளர்ப்பு என்பது ஒரு சிலருக்குத் தொழிலாக இருந்தாலும், பெரும்பாலும் வீட்டுக்கு காவல் என்ற அடிப்படையிலேயே வளர்க்கப்படுகின்றன. நாட்டு நாய் இனங்கள் முதல் வெளிநாட்டு இனங்களைச் சார்ந்த நாய்கள் வரை பல்வேறு நாய்கள் வளர்ககப்படுகின்றன. இந்த நாய்களை முறையாகப் பராமரிப்பதை குழந்தை வளர்ப்பு போல மேற்கொள்ளக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவரவர் வசதியைப் பொறுத்து நாய் வளர்ப்பில் அக்கறை செலுத்தப்படுகிறது. நாய்களுக்கான மருத்துவமனை, மருந்தகம், உணவுப்பொருள் விற்பனையகம், பொழுதுபோக்கு மகிழ்விடம் எல்லாம் உருவாகிவிட்டன. வளர்ப்பு நாய்களுக்குள்ள வசதிகள் எதுவும் தெரு நாய்களுக்கு கிடையாது.
உயிரினம் என்ற அளவில் வளர்ப்பு நாய்களாக இருந்தாலும் தெரு நாய்களாக இருந்தாலும் அவற்றின் தன்மை ஒன்றுதான். ஆனால், வளர்ப்பு நாய்களுக்குரிய கவனிப்பு, தெரு நாய்களுக்கு கிடையாது. கட்டுப்பாடும் கிடையாது. இரவு-பகல் என்று எல்லா நேரத்திலும் அவை சுற்றிக் கொண்டே இருக்கின்றன. சென்னையில் தொடங்கி நாகர்கோவில் வரை எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். பகலைவிட இரவு நேரங்களில் அதிகமாக உலவுகின்ற தெருநாய்கள். கட்டுப்பாடில்லாத இந்த நாய்களால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் செய்திகள் தொடர்ந்து வெளியானபடியே உள்ளன.
இரவு நேரத்தில் வெளியூர் பயணம் முடித்து சொந்த ஊருக்குத் திரும்புகிறவர்களாக இருந்தாலும், சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு சென்று சேர்கிறவர்களாக இருந்தாலும், பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடம் அருகிலேயே இருந்தாலும்கூட நடந்து போக முடியாது. டிராவல் பேக்குடன் வருகிறவர்களைப் பார்த்தாலே நாய்கள் சுற்றிக்கொண்டு குரைக்கத் தொடங்கிவிடுகின்றன. தெருநாய்களில் எது சாதா நாய், எது வெறி நாய் என்பது பயணிகளுக்குத் தெரியாது. அவற்றிடமிருந்து தப்பித்து செல்வதே அவர்களுக்குப் பெரும்பாடாக ஆகி விடுகிறது.
நாய்த் தொல்லைக்குப் பயந்து உறவினர்களையோ, நண்பர்களையோ டூவீலரை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்கு வரச் சொல்லியிருந்தால், பயணியும் நண்பரும் எதிர்கொள்கின்ற நிகழ்வுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும். டூவீலரை ஒரு நாய் குரைத்துக் கொண்டே துரத்த, அதன் சத்தம் கேட்டு மற்ற நாய்களும் ஒன்றன்பின் ஒன்றாக வர, எந்த இடத்தில் கடித்து வைக்குமோ என்று தெரியாமல் டூவீலரை ஓட்டுபவர் தன் கால்களை உயர்த்த, பின்னால் உட்கார்ந்திருக்கும் பயணி தன் கால்கள், உடல் எல்லாவற்றையும் குறுக்கிக்கொண்டு பயணிக்க, சர்க்கஸ் கம்பெனியின் மரணக் கிணற்றில் பைக் ஓட்டுவதைவிடவும் பயங்கரமான அனுபவத்தை டூவீலர்காரர்கள் அனுபவிக்க நேர்கிறது.
நாய்த் தொல்லக்குப் பயந்து, நடந்தும் போக முடியாது-டூவீலரிலும் போக முடியாது என்கிறபோது நள்ளிரவு கடந்த நேரத்தில் அதிகக் கட்டணம் செலுத்தி கார், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் பயணிகள். ஊர்ப்பயணத்தைவிட சில நேரங்களில் இந்தக் கட்டணம் கூடுதலாகிவிடுகிறது. பயம், பணச்செலவு இவற்றையெல்லாம் கடந்துதான் இரவு நேரங்களில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெளியூர் பயணிகள் மட்டுமின்றி, அன்றாடம் அலுவலகம் முடித்தும், வியாபாரம் முடித்தும் இரவு நேரங்களில் இருப்பிடம் திரும்புகிறவர்கள் நிலையும் இதுதான்.
புளூ கிராஸ் போன்ற அமைப்புகளும், விலங்குகள் மீதான ஆர்வம் கொண்டவர்களும் நாய்களுக்காகப் பரிதாபப்படுகிறார்கள். அதற்கேற்ற வகையில் நீதிமன்ற உத்தரவுகளும் அமைந்துள்ளன. கார்களில் செல்கிறவர்களுக்கு கால்நடைகளின் அவஸ்தையும், கால் நடையாக செல்கிறவர்களின் அவஸ்தையும் தெரிவதில்லை. மனிதர்கள் மீதும் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது.
தெருநாய்கள் துரத்தியதால் விழுந்து அடிபட்டு இறந்தவர்கள் இருக்கிறார்கள். தெருநாய்கள் கடித்ததால் இறந்தவர்கள் இருக்கிறார்கள். மனிதர்களை மட்டுமின்றி, ஆடு-மாடு போன்றவற்றையும் தெருநாய்கள் கடிப்பதால் அவையும் பாதிக்கப்படுகின்றன. அன்றாடம் இத்தகைய நிலைமை தொடர்வதால் தமிழ்நாடு அரசு இது குறித்து ஒரு தெளிவான முடிவை எடுத்து நாய்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதற்கும், மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.