நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் வெளியிட்ட கருத்து, சமூக வலைதளங்களில் பரபரப்பையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நடிகைகளின் நடிப்பு முறைகள் குறித்து அவர் தெரிவித்த கருத்தே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

ஒரு பேட்டியில் பேசிய மாளவிகா மோகனன் (MalavikaMohanan) , சில தமிழ், தெலுங்கு நடிகைகள் காட்சிகளில் நடிக்கும் போது உரையைக் கவனமாகப் படிக்காமல், “1, 2, 3, 4” போன்ற எண்களை எண்ணுவது போலவே நடிப்பதாக கூறினார். பின்னர் அந்த காட்சிகளுக்கு டப்பிங் மூலம் உரை சேர்க்கப்படுவதாகவும், இது உண்மையான நடிப்பு அனுபவத்தை பாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்தான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
தொடர்ந்து, மாளவிகாவின் இந்த பேச்சுக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, அவர் மற்ற நடிகைகளை விமர்சிப்பதற்கு முன் தனது சொந்த நடிப்பைப் பற்றிய விமர்சனங்களை நினைவில் கொள்ள வேண்டும் என பலர் கருத்து பதிவிட்டனர். ‘மாஸ்டர்’ (Master) உள்ளிட்ட சில படங்களில் அவரது நடிப்பு சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது என்பதை சுட்டிக்காட்டி, “முதலில் தன்னை சரி செய்து கொள்ள வேண்டும்” என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இதனுடன், சிலர் மாளவிகாவின் நோக்கத்தை சந்தேகிக்கும் வகையிலும் கருத்து தெரிவித்தனர். சமீபத்தில் வெளியான அவரது படம் பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில், அதற்குப் பிறகே இந்த கருத்து வெளியானது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியதாக பேசப்படுகிறது. (Online Tamil News)
அதே நேரத்தில், மாளவிகாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சிலர், மாளவிகா கூறியது தனிப்பட்ட நடிகைகளை குறிவைத்து அல்ல, திரையுலகில் உள்ள ஒரு பொதுவான நடைமுறையை சுட்டிக்காட்டுவதற்காகவே என தெரிவித்துள்ளனர். மேலும், நடிப்பு மற்றும் டப்பிங் தொடர்பான விவாதத்தை வெளிப்படையாக பேசுவது அவசியம் என்றும், அவரது கருத்து ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மாளவிகா மோகனன் தனது கருத்து குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. இருப்பினும், அவரது பேச்சு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களிடையே தொடர்ந்து விவாதமாக இருந்து வருகிறது. இந்த சர்ச்சை, திரையலகில் நடிகர்களின் நடிப்பு நடைமுறைகள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.


