பேசி வளர்ந்த இயக்கம் என்பது தி.மு.க.வுக்குரிய சிறப்பு. இப்போது போல கூகுள், சாட்ஜி.பி.டி., ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வசதிகளும் தேடுபொறிகளும் இல்லாத காலத்தில் உலக வரலாற்றையும், புரட்சியாளர்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, அதுபோல தமிழ்நாட்டை முன்னேற்றிட வேண்டும் என்று அறிஞர் அண்ணா மக்களிடம் பேசுவார். அண்ணாவைப் போலவே நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, ஈ.வெ.கி.சம்பத், பேராசிரியர் அன்பழகன், ஆசைத்தம்பி போன்ற பலரும் பேசுவார்கள். மேடையில் பேசியது மக்களிடம் விவாதமாகும். அதுதான் அரசியலின் விளைவு.
டீக்கடைகளில், சலூன் கடைகளில், வாடகை சைக்கிள் கடைகளில் தலைவர்களின் பேச்சுகளையும், அவர்கள் எழுதிய கட்டுரைகள் வெளியான பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டு விவாதிப்பார்கள். அதுமட்டுமல்ல, அண்ணா உள்ளிட்ட தலைவர்களைப் போல நூற்றுக்கணக்கான உள்ளூர் பேச்சாளர்கள் உருவாகினர். தெருமுனைகளில் நின்று அவர்கள் பேசுவார்கள். ஊர்ச்சந்தை அருகே பேசுவார்கள். பேருந்து நிலையம் அருகே பேசுவார்கள். மக்களின் கவனத்தை ஈர்க்கின்ற மொழியில் அவர்களுடைய பேச்சு இருக்கும்.
இயக்கத்தின் கருத்தை சொல்லக்கூடிய வகை பேச்சும், எதிரிகளை நக்கலடித்து நையப்புடைக்கின்ற பேச்சும் என இருவகை பேச்சுகள் எல்லாக் கட்சிகளிலும் உண்டு. இரண்டாவது வகைக்கு தனி ரசிகப் பட்டாளமும் இருக்கும். தி.மு.க.வில் இரண்டு வகைப் பேச்சையும் சம அளவில் கலந்து பேசக்கூடிய பலர் இருந்தனர், இருக்கின்றனர். இளம் பேச்சாளர்களையும் தி.மு.க. இளைஞரணி தயார் செய்துள்ளது.
தற்போது பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் குறைந்து போய், டி.வி. விவாதங்கள், யூ-டியூப் பேச்சுகள் அதிகமாகிவிட்டன. அதற்கேற்ற ‘கன்டன்ட்’ உள்ள பேச்சாளர்களே கவனம் பெறுகிறார்கள். மேடைப் பேச்சாளர்களிலும் யார் இப்படிப்பட்ட ‘கன்டன்ட்’ உடன் பேசுகிறார்களோ அவர்களின் பேச்சே வலைத்தளங்களில் வைரல் ஆகிறது. தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளராக அறியப்படும், தலைமைக்கழகப் பேச்சாளர்களில் ஒருவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. சென்னை மக்களின் மொழியில் பேசும் வழக்கம் உடையவர்.
கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் இன்றைய தி.மு.க. ஆட்சியிலும் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை மிக நேர்த்தியாக எடுத்துரைக்கக்கூடியவர். அதுபோலவே, அரசியல் எதிரிகளை வசைபாடுவதிலும் வல்லவர். சென்னையில் பயன்படுத்தப்படும் சில சொற்களை முன்வைத்து அவர் பேசும் பேச்சுகள் வைரல் கன்டன்ட்களாகி, அரசியலுக்கு அப்பாற்பட்ட செய்திகளுக்கும் அவை டெம்ப்ளட்டுகளாக மாறின.(Online Tamil News)
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னை மிகவும் அவதூறாகப் பேசிவிட்டதாக ஏற்கனவே தி.மு.கவிலிருந்து, பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு சென்று, தற்போது பா.ஜ.க.வில் உள்ள நடிகை குஷ்பு ஊடகத்தின் முன் கண்ணீருடன் பேட்டியளித்தார். இது தொடர்பான புகாரில், தி.மு.க. ஆட்சியிலேயே தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு, பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய பேச்சுக்காக பல வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். அதில் ஆளுநருக்கு எதிராகவும், நடிகை குஷ்புவுக்கு எதிராகவும் பேசியது தொடர்பான வழக்கில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தன்னை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாகப் பேசினார் என ஊடகங்களிடம் கண்ணீருடன் பேட்டி கொடுத்த நடிகை குஷ்பு, பேட்டி முடிந்துவிட்டதாக நினைத்து, கேமரா ஆன் பண்ணியிருக்கும்போதே சிரித்து கலகலப்பாகப் பேசினார். ஆனால், அப்போதே சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். தி.மு.க.வின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி செய்தது தவறுதான். எனில், அதே தவறை-அவரை விட மோசமாக தி.மு.க.வையும் தி.மு.க. தலைவர்களையும் அவரது குடும்பத்தாரையும் அ.தி.மு..கவின் முன்னாள் அமைச்சர்கள் உள்பட, பா.ஜ.க, நா.த.க, த.வெ.க. உள்ளிட்ட கட்சியினர் பேசும்போது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குமுறல் தி.மு.க தொண்டர்களிடம் இருக்கிறது.
மேடை நாடகங்களில் எஸ்.வி.சேகர் வகையறாக்கள் காமெடி என்ற பெயரில் என்ன பேசுகிறார்களோ, அதைத்தான் தன் மேடைப் பேச்சின் நடுவே எப்போதாவது சென்னை மொழியில் வெளிப்படுத்துகிறார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. எஸ்.வி.சேகருக்கு பாராட்டு மேடை கிடைக்கிறது. சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறைவாசம்தான் மிஞ்சுகிறது. முதலமைச்சர் என்ற பதவிக்குக்கூட மதிப்பளிக்காமல் தி.மு.க. தலைவரை மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மோசமாக சித்தரிப்பவர்கள் எவ்வித நடவடிக்கையும் எதிர்கொள்வதில்லை என்பதுடன், அவர்களில் பலர் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோருடன் மேடையேறியோ, தனிப்பட்ட முறையில் சந்தித்தோ புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்.
தி.மு.க.வையும் அதன் தலைவரையும் இழிவாகப் பேசுவோருடன் வலைத்தளங்களில் சண்டை செய்பவர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருககிறார்கள் என்ற குமுறலும் தி.மு.க. தொண்டர்களிடம் அதிகமாக உள்ளது. அறிவாலயம் வாசலைக்கூட மிதிக்காத தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் அஸ்திவாரம் என்று முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அடிக்கடி குறிப்பிடுகிறார். அது கட்சியின் அனைத்து மட்டங்களிலும் முழுமையாக நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே கடைக்கோடித் தொண்டர்களின் ஒரே எதிர்பார்ப்பு.



