(Iranisrealwar) மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில், இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை அனுப்பத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே உருவான போர் நிலைமையின் காரணமாக, பாரசீக வளைகுடாவையும் அரபிக் கடலையும் இணைக்கும் முக்கியமான கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரிணையை ஈரான் மூடியுள்ளதாகவும், அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், விதிமுறைகளை மீறி பயணம் செய்தால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான்(Iran) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூழ்நிலை உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு இது முக்கியமான பிரச்சினையாகும். காரணம், இந்தியா மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் சுமார் 40 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நாட்டிற்கு வருகிறது. எனவே இந்த கடல் பாதை பாதிக்கப்பட்டால், இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தற்போது இந்தியாவிடம் அடுத்த 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய்(Crude Oil) இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மத்திய கிழக்கில் பதற்றம் நீண்ட காலம் தொடர்ந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நெருக்கடியை சமாளிக்க ரஷ்யா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்திய கடல் எல்லைக்கு அருகில் காத்திருக்கும் கப்பல்களில் சுமார் 95 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக இந்தியாவை நோக்கி திருப்பிவிட தயாராக இருப்பதாகவும் ரஷிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த கப்பல்கள் ஒரு வாரத்திற்குள் இந்திய துறைமுகங்களை அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய மத்திய அரசு அதிகாரிகள் கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாமல் இருக்க பல்வேறு மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் நாளொன்றுக்கு சுமார் 56 லட்சம் பீப்பாய் எண்ணெயை பதப்படுத்தும் திறன் கொண்டவை. எனவே நீண்ட கால தடைகள் ஏற்பட்டால் எரிபொருள் சந்தையில் அழுத்தம் அதிகரிக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா அதிக அளவில் ரஷ்யா (Russia) கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களின் காரணமாக அந்த இறக்குமதி படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியா நாளொன்றுக்கு சுமார் 11 லட்சம் பீப்பாய் ரஷ்யா கச்சா எண்ணெய்யை மட்டுமே இறக்குமதி செய்தது. தற்போது ஏற்பட்டுள்ள புதிய சர்வதேச சூழ்நிலையில், இந்தியா மீண்டும் ரஷ்யா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


