ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 321.17 ரூபாய்க்கும், டீசல் 335.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே எரிபொருள் விலை இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 78 டாலரிலிருந்து 107 டாலராக அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், இனி வரும் காலங்களில் உலக சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப வாரந்தோறும் எரிபொருள் விலையை மாற்றியமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு, இந்த திடீர் விலையேற்றம் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. லாகூர், கராச்சி போன்ற நகரங்களில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.(Online Tamil News)


