பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியுள்ள நிலையில், இதனால் அந்நாட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசல் 520.35 ரூபாய்க்கும், பெட்ரோல் 458.40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது. எரிபொருள் தேவையைச் சமாளிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் அரசு சில குறிப்பிட்ட மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு லிட்டருக்கு 100 ரூபாய் வரை மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக மாதம் 20 லிட்டர் வரை மட்டுமே வழங்கப்படும். அதேபோல், விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்க, உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களுக்கு மாதம் 70,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நேரடி நிதியுதவி வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
நாட்டின் இந்த இக்கட்டான நிலையை உணர்ந்தும் வகையில் , முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி நாட்டு மக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வைச் சமாளிக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசு எடுத்து வரும் இத்தகைய கடினமான முடிவுகள் நாட்டின் நீண்டகால முன்னேற்றத்திற்கு அவசியம் என்றும், மக்கள் அமைதி காத்து இந்த நெருக்கடியை இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.(Online Tamil News)


