இயக்குநர் சோமீதரன் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படத்தைப் பாராட்டி நடிகர் சூர்யா ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நீளிரா என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம் எனத் தனது பேச்சைத் தொடங்கிய நடிகர் சூர்யா, சம காலத்தில் நடைபெறும் போர்களால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், அதில் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது சாதாரண எளிய மக்கள் தான் என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
ஒரு போர் சூழலில் ஒரு கல்யாணம் நடக்கும்போது, அந்த இரவை மக்கள் எப்படி கடக்கிறார்கள் மற்றும் எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரு எமோஷனல் த்ரில்லராக இந்தப் படம் விவரிப்பதாக அவர் கூறினார். அந்தத் துயரமான இரவை நேரில் உணர்ந்தவர் மற்றும் அந்த இரவைக் கடந்தவரே இந்தப் படத்தை இயக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தனது இலங்கைத் தமிழர் நண்பர் சோமீதரன் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த கால போர் மற்றும் தற்போதைய சூழல் ஆகியவற்றுக்கு ஒரு மவுன சாட்சியாக நம் எல்லோருடைய மனதிலும் நிலைத்து இருக்கும் என்று தான் நம்புவதாகவும், முக்கியமாக இது போரை விரும்பாதவர்களுக்கான படம் என்றும் சூர்யா நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஈழப் போர்ச் சூழலில் நடக்கும் ஒரு திருமண நிகழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


