கோவையிலிருந்து வளைகுடா நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு ஜவுளி பொருட்கள், வெட் கிரைண்டர்கள், மோட்டார் பம்புகள் மற்றும் காய்கறிகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்த ஏற்றுமதி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, போர் பதற்றத்தால் பெரும்பாலான சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முக்கியமான கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், சரக்கு கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி நன்னம்பிக்கை முனை வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரக்குகள் போய்ச் சேர வேண்டிய கால அளவு 20 முதல் 25 நாட்கள் வரை தாமதமாகிறது. இந்த தாமதத்தால் வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்களின் ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். மேலும், ஜவுளி உற்பத்திக்குத் தேவையான செயற்கை நூலிழையின் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதேபோல் கோவை வெட் கிரைண்டர் தொழில்துறையும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான 450 கிரைண்டர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜபல் அலி துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வால் தவித்து வரும் உற்பத்தியாளர்கள், தற்போது ஆர்டர்கள் ரத்து மற்றும் பணப்பரிமாற்றத் தாமதத்தால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஏற்றுமதியாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.(Online Tamil News)


