முப்பது ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முத்தையா – காமாட்சி ஜோடியின் புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1989ல் வெளிவந்தது ராமராஜன் – கனகா நடிப்பில் ‘கரகாட்டக்காரன்’. கனகாவுக்கு அதுதான் முதல் படம். பிரபல நடிகை தேவிகாவின் மகள் என்ற அடையாளத்துடன் அந்தப்படத்தில் அறிமுகமானார் கனகா.
கங்கை அமரன் இயக்கத்தில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்த அந்த படம் ஓராண்டுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ராமராஜனும் கனகாவும் இணைந்து ‘தங்கமான ராசா’ தந்தார்கள்.

அதன்பின்னர் ராமராஜன் புகழின் உச்சிக்கு சென்றார். அரசியல், வயது முதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் அவ்வப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
தாய் தேவிகா இறந்த பிறகு நடிப்பதை நிறுத்தி இருந்த கனகா, பின்னர் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக அதையும் நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் அண்மையில் ராமராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து அவர் வீட்டில் உணவருந்தி இருக்கிறார் கனகா. இந்த சந்திப்பில் இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்கள்.
இந்த போட்டோ வைரலாகி வருவதால், மீண்டும் முத்தையா – காமாட்சி ஜோடி களமிறங்குகிறதா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பார்ட்-2வில் ராமராஜனுக்கு நம்பிக்கை இல்லாததால் கரகாட்டக்காரன் -2 வர வாய்ப்பு இல்லை.



