டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் (Sukesh Chandrasekhar), காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிற்கு (Jacqueline Fernandez) 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டர் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சிறையிலிருந்து எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், ஜாக்குலினை தனது ‘பொம்மை’ என்று குறிப்பிட்டு, இந்த “Airbus H-Series” ஹெலிகாப்டர் அவரது கடின உழைப்பில் வந்த பணத்தில் வாங்கப்பட்டது என்று கூறியுள்ளார். இந்த ஹெலிகாப்டரின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் ஜாக்குலினின் பெயரைக் குறிக்கும் விதமாக ‘JF’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், இது அவரது ரசனைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் சுகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், “சிறை கம்பிகளும் சுவர்களும் நம்மைப் பிரித்திருக்கலாம், ஆனால் நம் அன்பை யாராலும் பிரிக்க முடியாது” என்றும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சுகேஷ், இந்தப் பரிசு முற்றிலும் தனது நேர்மையான சம்பாத்தியத்தில் இருந்து வழங்கப்படுவதாகவும், இதற்கும் அவர் மீதான மோசடி வழக்குகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். ஜாக்குலினின் பாதுகாப்பிற்கும் அவரது பயணங்களுக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள நிலையில், ஜாக்குலினுக்கு அவர் தொடர்ந்து இதுபோன்ற விலை உயர்ந்த பரிசுகளை அறிவிப்பதும், கடிதங்கள் எழுதுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முன்னதாக சொகுசு படகு மற்றும் மெட்டா நிறுவனத்தின் பங்குகளைப் பரிசாக அளிப்பதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜாக்குலின் தரப்பிலிருந்து சுகேஷுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


