அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் ஆர்த்தர் பகுதியில் அமைந்துள்ள வலேரோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்த தொழில்துறை ஹீட்டர் திடீரென வெடித்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்புச் சத்தம் பல மைல் தொலைவிற்கு கேட்டதுடன், அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்த ஜன்னல்கள் அதிர்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் அவசரகால மீட்புப் படையினர் மற்றும் வலேரோ நிறுவனத்தின் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுத்திகரிப்பு நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக் கருதி வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகிலுள்ள பிரதான நெடுஞ்சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தினசரி சுமார் 4,35,000 பேரல் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து பெட்ரோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருளாக மாற்றும் திறன் கொண்ட இந்த வலேரோ சுத்திகரிப்பு நிலையம், அமெரிக்காவின் எரிபொருள் உற்பத்தியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தால் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் எரிபொருள் விலையில் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் இவ்விபத்தில் உயிரிழப்புகள் குறித்து அதிகாரபூர்வமாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.(Online Tamil News)


