சென்னையின் மக்கள் தொகைக்கு வழக்கமாக இயக்கப்பட்டு வந்த புறநகர் ரயில்களே போதுமானதாக இல்லை என்று மக்கள் குமுறி வெடித்துக் கொண்டிருக்கும் போது எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணத்தை காட்டி 45 நாட்களுக்கு 89 புறநகர் ரயில் சேவையை நிறுத்திவிட்டது ரயில்வே துறை. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் என்று சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தேர்வு காலம் என்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ரயில்வே சேவை பாதிப்பினால் குறித்து நேரத்திற்கு செல்ல முடியாமல் பல மணி நேரம் தாமதமாக செல்லும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

குறைவான ரயில்சேவையில் மூச்சு முட்டும் அளவிற்கு பயணிகள் புளிமூட்டை திணிக்கப்பட்டு செல்லப்படுவதால் பேருந்துநிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஒன்றிய பாஜக அரசும், ஒன்றிய அரசும் தொடர்ந்து மெத்தனப்போக்கை கடைப்பிடித்து சென்னை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரையிலும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் படும் அவதியை கண்டு மனம் இரங்கவில்லை ஒன்றிய ரயில்வே அமைச்சர்.
ஒவ்வொரு தேர்தலிலும் தங்களை புறக்கணிக்கும் தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் நோக்கில் 2026 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறதா என்ற சந்தேகம் சென்னை மக்களிடையே வலுத்து வருகிறது.
ஒன்றிய ரயில்வே துறையின் அலட்சியப் போக்கிற்கு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் கண்டனத்தை எழுப்பி இருக்கிறார்.

’’சென்னையில் தொடர்ந்து ஐந்து நாட்களாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவர்கள், தினசரி பயணிகள் – அனைவரின் வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே என்பது மாநில அரசின் கீழ் அல்ல; இது மத்திய அரசின் பொறுப்பு. இன்று அஸ்வின் வைஸ்ணவ் பதில் சொல்ல வேண்டிய நேரம் இது.
ஏன் தொடர்ந்து சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன? ஏன் முன்கூட்டியே மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவில்லை? ஏன் பொதுமக்களுக்கு சரியான தகவல் வழங்கப்படவில்லை?
தமிழகத்தில் பாஜக எம்பிக்கள் இல்லை என்று விமர்சனம் செய்வதற்கு பதிலாக, மத்திய அரசு தனது பொறுப்பை ஏற்க வேண்டும். மக்கள் நலனை விட அரசியல் முக்கியமா?

சென்னை மக்களின் துயரத்தை உடனடியாக தீர்க்க ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்கவும். மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை உடனடியாக செய்யவும்.
பயணிகளுக்கு தெளிவான விளக்கம் வழங்கவும். பொதுமக்கள் சிரமப்படும்போது மௌனம் காக்கும் ரயில்வே அமைச்சரின் அலட்சியத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மக்கள் சேவை என்பது அரசியல் சுலோகம் அல்ல — அது பொறுப்பு.’’
தேர்தல் காலத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இது மாணவர்களின் தேர்வு காலம் என்பதையும் கருத்தில் கொண்டு சென்னை மக்களை இனியும் வதைக்காமல் உடனடி நடவடிக்கை எடுத்து சென்னை மக்களின் துயரத்தை போக்க ஒன்றிய பாஜக அரசு முன்வரவேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.



