பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு அம்மாநிலப் பெண்களுக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.

‘முதலமைச்சர் மாவன் தியான் சத்கார் யோஜனா’ (Mukh Mantri Mawan Dhian Satikar Yojna) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 நிதியுதவி வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டு நிலையில் உள்ள பட்டியலின (SC) பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு மாதம் ரூ. 1,500 வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த மிக முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக பஞ்சாப் அரசு தனது 2026-27 நிதியாண்டு பட்ஜெட்டில் சுமார் ரூ. 9,300 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு சிறப்பம்சமாக, ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் அல்லது மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் போன்ற இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்று வரும் பெண்களும், கூடுதலாக இந்த ரூ. 1,000 நிதியுதவியைப் பெறத் தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு குடும்பத்தில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட தகுதியுள்ள பெண்கள் தனித்தனியாக இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இருப்பினும், அரசின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் (தற்போதைய மற்றும் முன்னாள்), வருமான வரி செலுத்துபவர்கள், முன்னாள் அல்லது தற்போதைய எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் போன்ற வசதி படைத்த பிரிவினர் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
பஞ்சாப் மாநிலத்தின் மொத்த பெண் மக்கள் தொகையில் சுமார் 97 சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பப் பதிவு வரும் ஏப்ரல் 13-ம் தேதி, சீக்கியர்களின் அறுவடைத் திருவிழாவான ‘பைசாகி’ அன்று தொடங்க உள்ளது.
பஞ்சாப் மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா இது குறித்துப் பேசுகையில், இந்தத் திட்டம் பெண்களின் கையில் நேரடிப் பணப்புழக்கத்தை அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பஞ்சாபிலும் இத்தகைய ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..(Online Tamil News)


