அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன் வழங்கப்படும் என்று 2016 சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார் ஜெயலலிதா. அத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும், வாக்குறுதியின் படி மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்கும் 50% மானியம் திட்டத்தை தொடங்கினார் ஜெயலலிதா.
அதிமுகவின் அந்த தேர்தல் அறிக்கையில் மக்களை கவர்ந்ததாக பார்க்கப்பட்டது இலவச செல்போன் திட்டம்தான். அது கிடப்பிலேயே போடப்பட்டுவிட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியும் அந்த செல்போன் திட்டத்தை நிறைவேற்றவில்லை. அதற்குள் 2021 சட்டமன்ற தேர்தல் வந்தபோது ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அள்ளிவிட்டார் பழனிசாமி. அப்போது செல்போன் திட்டம் என்னாச்சு? என்று பலரும் கேள்வி எழுப்ப, குடும்பத்திற்கு ஒரு செல்போன் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்குள் கொரோனா காலம் வந்துவிட்டது. அதனால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று சமாளிக்கப்பார்த்தார் அதிமுகவின் மூத்த நிர்வாகி பா.வளர்மதி.

இதையடுத்து 2021 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 4ம் தேதி அன்று வெளியானது. ‘அம்மா வாஷிங் மெஷின்’, இலவச டேட்டா, விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, குடும்பத்திற்கு 6 சிலிண்டர்கள் என்று வாக்குறுதி அளித்திருந்தார் பழனிசாமி. ஆனால் இந்த வாக்குறுதிகள் எதுவும் மக்களிடத்தில் எடுபடவே இல்லை. அவர் முதல்வராகவில்லை.
ஆனால் அந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வரான மு.க.ஸ்டாலின், 16.08.2021ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுகவை பார்த்து சில கேள்விகளை எழுப்பினார்.

’’இலவச செல்போன் வழங்கப்படும் என்று சொன்னீர்களே கொடுத்தீர்களா? ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாக வழங்கப்படும் என்று சொன்னீர்களே, கொடுத்தீர்களா? அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை வழங்கப்படும் என்று சொன்னீர்களே.. அது என்னாச்சு? கோ – ஆப்டெக்ஸ் துணி வாங்க ரூ.500 டோக்கன் தரப்படும் என்று சொன்னீர்களே, கொடுத்தீர்களா? அனைத்து பொது இடங்களிலும் வைபை வசதி செய்து தரப்படும் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? பட்டு ஜவுளி பூங்கா உருவாக்கப்படும் என்று சொன்னீர்களே, உருவாக்கினீர்களா?’’என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

2016 சட்டமன்ற தேர்தலில் இலவச செல்போன், 2021 ல் அம்மா வாஷிங் மெசின் வாக்குறுதிகள் போக இப்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கும் 297 வாக்குறுதிகள் பலவும் திமுக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களாகவே உள்ளன. அம்மா இல்லம், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று திமுகவின் திட்டங்களையே நகலெடுத்து அறிவித்திருக்கிறார். அதில் புதிதாக அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் என்ற பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதி எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது மக்களின் கருத்துகள் பலவும்.



