போஸ்டர் ஒட்டியதில் எழுந்த மோதல் 21 பழிக்குப் பழி கொலைகளை வாங்கி 22 ஆண்டுகளுக்கும் மேலாக தீராப்பகையாக எரிந்து கொண்டிருக்கிறது. கூலிப்படையினர் வைக்காமல் உறவுகளுக்குள்ளேயே இந்த பழிக்குப்பழி கொலைகள் நடந்து வருகிறது.
பண்ணையார் தரப்புக்கும் பசுபதி பாண்டியனுக்கும் இடையே எழுந்த சாதாரண வாய்க்கால் தகராறு இரு சமூகத்திற்கு இடையேயான பகையாக மாறி அது 32 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து இரு தரப்பிலும் 50க்கும் மேற்பட்ட பழிக்குப் பழி கொலைகள் வாங்கியது. இதே போன்று போஸ்டர் ஒட்டியதில் எழுந்த மோதலில் மதுரையிலும் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து 21 பழிக்குப் பழி கொலைகளை வாங்கி வருகிறது உறவினர்களுக்குள் எழுந்த அரசியல் பகை.

என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வீ.கே.குருசாமி – ராஜபாண்டி. உறவினர்களான இவர்கள் சிறு வயதிலேயே குடும்பத்தினருடன் மதுரைக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். வளர்ந்து ஆளாகியதும் அரசியலில் அடியெடுத்து வைத்தனர். திமுக மண்டல தலைவர் ஆனார் குருசாமி. அதிமுக மண்டல தலைவர் ஆனார் ராஜபாண்டி. அங்கேதான் இருவருக்கும் இடையே மோதல் உருவானது.
2003ல் உள்ளாட்சித்தேர்தலின் போது போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது. ராஜபாண்டிக்கு உதவியாக இருந்த அவரின் அண்ணன் மகன் சின்ன முனீசை குருசாமி தரப்பு வெட்டி கொலை செய்தது. அரசியல் ரீதியாக மிரட்டுவதற்காக அடித்து உதைத்து போட்டுவிட்டு கிளம்பியபோது, என்னை உயிருடன் விட்டால் உங்க ஒருத்தனையும் உயிரோட விடமாட்டேன் என்று சின்ன முனூசின் பேசவும் ஆத்திரப்பட்டு கொலை செய்துவிட்டனர். இதில் உறவினர்கள் இரு தரப்புக்கும் இடையே ஜென்ம பகை ஆனது.

2008ல் சின்ன முனீஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வழுக்கை முனீசை ராஜபாண்டி தரப்பு கொலை செய்தது. அடுத்து குருசாமியின் உறவினர்கள் மாரிமுத்து, ராமமூர்த்தியை இரட்டைக்கொலை செய்தார் சின்ன முனீசின் தம்பி வெள்ளைக்காளி. இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் 2013ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியை கொலை செய்தார். இந்த கொலையில் உடனிருந்த வெள்ளை காளியின் உறவினர் சகுனி கார்த்தியின் தாய்மாமன் மயில் முருகனை குருசாமி தரப்பு வெட்டிச்சாய்த்தது. அதன் பின்னர் 2015ல் முனியசாமியை படுகொலை செய்தார் வெள்ளைக்காளி. 2016ல் குருசாமியின் மகள் கணவரின் தம்பி காட்டுராஜாவை கொலை செய்தார் வெள்ளைக்காளி.
இந்த பழிக்குப்பழி கொலையில் 2017ல் குருசாமியின் மகன் மணி, ராஜபாண்டியனின் மகன் தொப்புலி முனுசாமியை பைக்கில் கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டார். அதே ஆண்டில் குருசாமியின் ஆதரவாலர் சடையாண்டியை வெட்டிக் கொன்றுவிட்டார் வெள்ளை காளி. இவரின் கூட்டாளிகளான சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி இருவரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

இந்த என்கவுண்டருக்கு குருசாமிதான் காரணம் என்று ஆத்திரம் கொண்டு அவரின் உறவினர் எம்.எஸ்.பாண்டியனை கொல்ல துடித்தார் வெள்ளை காளி. பாண்டியன் நினைத்து அவரின் உறவினர் முனியசாமியை கொன்றுவிட்டது காளி தரப்பு. அப்போது விட்டாலும் 2019ல் பாண்டியை கொன்றது காளி தரப்பு.
பழிக்குப் பழி கொலையில் 2020ல் வெள்ளைக்காளி தரப்பு முத்து பாண்டியை கொன்றது குருசாமி தரப்பு. அதே ஆண்டில் குருசாமி தரப்பைச் சேர்ந்த மணியின் நண்பர் முருகானந்தத்தை நடுரோட்டில் வெட்டி கொன்றது காளி தரப்பு.

இதற்கிடையில் அதிமுகவில் மண்டல தலைவராக இருந்த ராஜபாண்டி 2011ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மதுரை மாநகராட்சி திமுக மண்டல தலைவராக இருந்த குருசாமி இந்த பழிக்குப் பழி கொலையில் இருந்து தப்பிக்க நினைத்து கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்து வந்த போது 2023ல் பெங்களூரு பனசாவடி பகுதியில் உள்ள ஓட்டலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வெள்ளைக்காளி தரப்பு வெட்டிச்சாய்தது. 70 முறை வெட்டுப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

2025ல் குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி படுகொலை வழக்கில் வெள்ளைக்காளியின் கூட்டாளி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
காவல்துறை இரு தரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட வெள்ளைக்கொடியை பறக்கவிடவில்லை இரு தரப்பும்.
கடந்த ஆண்டு ரவுடிகள் தொடர்ந்து என்கவுன்டர் செய்யப்பட்டு வந்ததால் சிறையில் உள்ள தன் கணவர் வெள்ளைகாளியை என்கவுண்டர் செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் திவ்யா.

இந்நிலையின் இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளை காளியை ஆஜர்படுத்திவிட்டு சென்னை சிறைக்கு அழைத்துச் சென்றபோது பெரம்பலூர் அருகே போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்கப்பட்டது. வெள்ளை காளியை தப்பிக்க வைக்க அவரது கூட்டாளிகள் நடத்திய தாக்குதலா இது? இல்லை, வெள்ளை காளியை கொலை செய்ய குருசாமி தரப்பு செய்த சம்பவமா இது? என்ற விசாரணையில் வெள்ளை காளியை குறிவைத்துதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது தெரியவந்திருக்கிறது.



