பொங்கல் விழா என்பது நான்கு நாள் விழாவாகும். போகி, தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்.
உற்றார் உறவினர் மட்டுமல்லாது சாதி, மத பேதம் இல்லாமல் அனைவரையும் கண்டு களிப்பதையே காணும் பொங்கல் என்கிறோம். சென்னை மெரினாவில் இந்த நாளில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காணும் பொங்கல் என்பது கன்னிப்பொங்கல் ஆக கொண்டாடப்படுகிறது.

நான்காம் நாள் பொங்கலை இம்மாவட்ட மக்கள் கன்னிப்பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்று நோன்பிருந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.
இந்த கன்னிப்பொங்கல் கன்று திருமணம் ஆகாத பெண்கள் ஒன்று கூடி வாசலில் கோலமிட்டு கும்மி அடித்து பாடுவார்கள். முறைமாமன் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி அவர்களிடம் இருந்து பணம் வாங்குவார்கள்.

தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நின்று கும்மி அடிப்பார்கள். அந்தந்த வீட்டினர் மங்கலப்பொருட்கள், அரிசி, வெல்லம், கரும்பு முதலானவற்றை கொடுப்பார்கள். அவற்றை எல்லாம் ஆற்றங்கரைக்கு எடுத்துச்சென்று புதுப்பானையில் பொங்கலிட்டு சாப்பிட்டு வீடு திரும்புவார்கள்.
நதியை கன்னி என்றும் அழைப்பதுண்டு. நதியை கன்னி அம்மனாகவே நினைத்து கன்னிப்பெண்கள் நதிக்கரையில் பொங்கல் வைத்து நல்ல வரன் கிடைக்க வழிபடுகின்றனர் இந்நாளில். இந்த பொங்கலை வேடிக்கை பார்க்க வரும் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஊறவைத்த பச்சரிசியில் சர்க்கரை கலந்து கொடுப்பார்கள். இந்த நவீன யுகத்தில் இந்த பழக்கம் குறைந்துவிட்டது.

கன்னிப்பெண்களுக்கு மட்டும் இந்த பொங்கல் அல்ல. கன்னிப்பொங்கல் அன்று உடன்பிறந்தவர்கள் நலமாக வாழ வேண்டும் என்று குறிப்பாக சகோதரர்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று சகோதரிகள் பிரார்த்தனை செய்து நோன்பிருந்து பொங்கல் வைப்பார்கள்.
முதல் நாள் வெண் பொங்கல் வைத்து அதில் மஞ்சல் பொடியை தூவி மஞ்சள் பொங்கல் தயாரிப்பார்கள், அதே போன்று குங்குமம் கலந்து சிவப்பு பொங்கல் தயாரிப்பார்கள். மறுநாள் சக்கரைப்பொங்கல் வைப்பார்கள், கூடவே பால்பொங்கல், தயிர்பொங்கல் தயாரிப்பார்கள். இந்த 5 வகை சாதங்களையும் சகோதரர்களுக்கு விருந்து வைப்பார்கள். சகோதர்கள் உள்ளூரில் இல்லாமல் இருந்தால் காக்காய்க்கு படைப்பார்கள்.
கன்னிப்பொங்கல் நாளில் சுமங்கலிகள் மூத்த சுமங்கலிகளிடம் ஆசிர்வாதம் பெறுகிறார்கள்.



