பொங்கல் விழா மூலம் தங்கள் உழைப்புக்கு பயிர் கிடைக்க காரணமான இயற்கைக்கு நன்றி கூறுகின்றனர். அதனால் தான் பொங்கல் “அறுவடைத் திருநாள்” என அழைக்கப்படுகிறது. பொங்கல் விழாவின்(Pongal) வரலாறு மிகவும் பழமையானது. சோழர் காலத்திலேயே இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திலான திருவொற்றியூர் கல்வெட்டில் பொங்கல் “புதியீடு விழா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதியீடு என்பது முதல் அறுவடை என்று பொருள்படும். இது அந்தக் காலத்திலேயே அறுவடை முடிந்த பின் விழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டதை காட்டுகிறது.
அதேபோல், கங்கைகொண்ட ராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் “மகர சங்கரமணப் பெரும் பொங்கல்” என்ற குறிப்பு காணப்படுகிறது. இதன் மூலம் தைப்பொங்கல் தினம் அரசரால் கூட முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஒரு பெருவிழாவாக இருந்தது என்பதும் தெரிய வருகிறது. மேலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைப்பொங்கல் நாளில் ராஜேந்திர சோழன் தனது பரிவாரங்களுடன் காவிரி ஆற்றில் புனித நீராடியதாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இதனால் பொங்கல் ஒரு அரசியல், சமூக, பண்பாட்டு விழாவாகவும் இருந்தது என்பது புரிகிறது.(Online Tamil News)

பொங்கல் விழா பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. புறநானூறு, பரிபாடல் போன்ற நூல்களில் அறுவடை மற்றும் பொங்கல் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. பழந்தமிழ் இலக்கியமான ஐங்குறுநூறு
“நெற்பல பொலிக! பொன் பெரிது சிறக்க…”
என்று வளமான அறுவடையைப் புகழ்ந்து கூறுகிறது. மேலும், சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்தில்
“மங்கையர் வளர்த்த செந்தீப்புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்”
என்ற வரிகள் மூலம், பொங்கல் சமைக்கும் வழக்கம் அந்தக் காலத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது.
இதனால், பொங்கல் விழா இன்றைய காலத்தில் மட்டும் தோன்றிய ஒன்று அல்ல; அது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்துள்ள ஒரு பாரம்பரிய திருவிழா. இயற்கையை மதிக்கும் பண்பாடு, உழைப்புக்கு மரியாதை, சமூக ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துக் காட்டும் விழாவாக பொங்கல் தமிழர்களின் அடையாளமாக என்றும் நிலைத்து நிற்கிறது.


