தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி அவர்கள் ஹாட்ரிக் ‘சாதனை’யையும் மிஞ்சியிருக்கிறார். எதில்? ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவதில்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படுவது மரபு. சட்டப்பேரவைக்கு ஆளுநர் வந்து, உரையைப் படிப்பதால் அதற்குப் பெயர் ஆளுநர் உரை. உண்மையில் அது, அரசாங்கத்தின் உரை. அதாவது, ஆளுங்கட்சி தன்னுடைய நிர்வாகத்தில் செய்த சாதனைகள், செய்யவிருக்கும் திட்டங்கள், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் இவைதான் ஆளுநர் உரையின் உள்ளடக்கம். அரசாங்கத்தின் தரப்பில் தயாரிக்கப்பட்டு, கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை ஆளுநர் தரப்பு ஏற்றுக்கொண்டு, சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் படிக்கும் உரையுடன் தொடங்கும். அரசமைப்புச் சட்டத்திற்கு மாறானதாக ஏதேனும் இருந்தால், ஆளுநர் தரப்பில் அது குறித்து தெரிவிக்கப்பட்டால், உரிய திருத்தங்களை அரசாங்கத் தரப்பில் செய்து, உரையை மீண்டும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைப்பார்கள். அதை ஆளுநர் படிப்பார். இதுதான் நடைமுறையும் மரபுமாகும். (Online Tamil News)
ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக மத்திய பா.ஜ.க. அரசின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட பின், முதன்முதலாக 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையைப் படித்தார். அரசாங்கம் அனுப்பிய உரை அப்படியே இருந்தது. 2023ஆம் ஆண்டு உரையில் இருந்த திராவிடம் என்ற சொல்லையும், திராவிடத் தலைவர்களின் பெயர்களையும் தவிர்த்துவிட்டுப் படித்தார். சிலவற்றை அவராகவே சேர்த்துப் படித்தார். அரசாங்கம் கொடுத்த முழு உரைதான் அவை குறிப்பில் ஏற்றப்படும் என்றும், ஆளுநர் சேர்த்த பகுதிகள் நீக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார்.
பொதுவாக, ஆளுநர் உரை நடைபெறும் நாளில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது வழக்கம். முந்தைய காலங்களில் அப்படி நடைப்பெற்றுள்ளது. ஆனால், ஆளுநர் உரையின்போது, ஆளுநரே வெளிநடப்பு செய்த ‘சாதனை’ ஆர்.என்.ரவிக்கே உரியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், அவருடைய வெளிநடப்புத் தொடர்கிறது. இந்த ஆண்டு, தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறளை சொல்லி, அதற்கான விளக்கத்தையும் சொல்லி பேரவைத் தலைவரான சபாநாயகர் அன்றைய நாளின் நிகழ்வுகளைத் தொடங்கி வைக்கும் மரபு பேரறிஞர் ஆண்ணா காலத்திலிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.
அதுபோலவே, மாநிலப் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து அங்கீகாரம் பெற்றதிலிருந்து, ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். ஆட்சியிலிருந்த கட்சிகள் மாறியபோதும், அதன் முதல்வர்கள் மாறியபோதும் இந்த மரபை மாற்றவில்லை. (Governor R.N. Ravi) ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு மாறாக, -+`தொடக்கத்தில் தேசிய கீதம், அதன்பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவேண்டும் என்றும், ஆளுநர் உரை நிறைவடைந்த பிறகு மீண்டும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனப் பிடிவாதம் செய்து, அதையே காரணம் காட்டி, தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்கிறார். நான்காண்டுகள் தொடர்ச்சியான வெளிநடப்பு, அதில் மூன்றாண்டுகள் தேசிய கீதத்தைக் காரணம் காட்டிய ‘ஹாட்ரிக்’ வெளிநடப்பு.
ஆளுநர் என்பது ஒரு நிர்வாகப் பதவி. மாநில அரசுகளை மத்திய அரசு கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட நியமனப் பதவி. சட்டமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அவை. ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அதனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அரசுதான் அதிகாரம் மிக்கது. ஆளுநர் தனக்குரிய வரம்பை உணர்ந்து, தன் வேலையை செய்வதே ஜனநாயக மாண்பு.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததிலிருந்து, மற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை மரபை மீறி செயல்படச் செய்து, ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது. அரசமைப்புச் சட்டத்தையே கேள்விக்குறியாக்குகிறது. தமிழ்நாடு ஆளுநர் செய்ததுபோலவே, கேரள ஆளுநரும் அந்த மாநில அரசாங்கத்தின் உரையைத் தன் வசதிக்கேற்ப படித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்றிய தீர்மானம் போலவே, கேரள முதல்வரும், அரசாங்கத்தின் முழு உரையே அவைக் குறிப்பில் ஏற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.வைப் பொறுத்தவரை, ஆளுநர் பதவி என்பதே அவசியமற்ற-ஜனநாயக விரோதமானது என அண்ணா காலத்திலிருந்து வலியுறுத்தி வருகிறது. தி.மு.க.வின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் (Chief Minister M.K. Stalin) அதையே வலியுறுத்தியிருப்பதுடன், இனி ஆண்டுத் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையையே மாற்றும் வகையிலான சட்டத்திருத்தம் வேண்டும் என பேரவையில் குரல் எழுப்பியுள்ளார். இந்தக் குரல் பிற மாநிலங்களிலும் வலிமையாக ஒலிக்கும்.
தலையங்கம் : ஆளுநரின் வேலை என்ன?


