நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் அதிமுகவில் இணைய விருப்பதாகவும் அவருக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் நாகை தொகுதியை ஒதுக்க இருப்பதாகவும் தகவல்.
நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். அக்கட்சியில் சீமானுக்கு அடுத்து பரபரப்பாக இருந்தவர் காளியம்மாள். சாட்டை துரைமுருகன் செல்போனில் இருந்த ஆடியோ வெளியாகி அதில் காளியம்மாளை சீமான் திட்டும் ஆடியோ நாம் தமிழர் கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது . ஒருகட்டத்தில் இது இருவருக்கும் இடையே பனிப்போராக மாறியது. இது வலுத்தபோது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்.

அதன்பின்னர் அமைச்சர் அன்பில்மகேஷ் மூலமாக திமுகவில் இணைகிறார் என்று செய்திகள் பரவின. ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் இருவரும் தவெகவில் இணைந்த நாளில் காளியம்மாளும் தவெகவில் இணைவதாகவும், முன்னதாக அவர் விஜய்யை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை.
அடுத்து நெல்லையில் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார் காளியம்மாள். விரைவில் பாஜகவில் இணைகிறார் என்று பரவிய தகவலும் கூட வதந்தி ஆனது.

இந்நிலையில் தற்போது அவர் அதிமுகவில் சேர இருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் தகவல். எம்.எல்.ஏ. சீட் அல்லது எம்.பி. சீட் என்றுதான் திமுகவிலும் டிமாண்ட் வைத்தார் காளியம்மாள். எடப்பாடி பழனிசாமி இந்த டீலிங்குக்கு ஒத்துக்கொண்டதால் காளியம்மாள் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்.



