பெரும்பாலும் எந்தவொரு பேட்டியிலும் பழனிசாமியின் பெயரைச் சொல்ல மாட்டார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அந்த அளவுக்கு அவர் மீது கோபத்தில் இருந்தவர் தினகரன். அதனால் துரோகி என்றும் அரக்கன் என்றும் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார். பதிலுக்கு பழனிசாமியும் ‘420’ என்று தினகரனை கடுமையாக விமர்சித்திருந்தார்.

பசும்பொன்னில் தேவர் பூஜையின் போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியதால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஒருங்கிணைப்பை செங்கோட்டையன் முன்னெடுத்து வலியுறுத்தி வந்த வேளையில் இதைக்கண்டு வெகுண்டெழுந்த டிடிவி தினகரன், ‘’செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதற்கு பழனிசாமியின் பதவி வெறியும், சுயநலமும்தான் காரணம். குரங்கு கையில் பூமாலை போல் அதிமுக எடப்பாடி கையில் இருக்கிறது. எங்களை துரோகி என்று சொல்லும் இபிஎஸ்தான் துரோகி. துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். 2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகம் வீழ்த்தப்படும். 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் நடக்கும் அரக்கன் பழனிசாமி வீழ்த்தப்படுவார்’’என்று வெடித்திருந்தார். இதற்குத்தான் செம்மலை உள்ளிட்ட பழனிசாமியின் ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

விலக்கப்பட்டவர்களுக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பில்லை என்று பழனிசாமி உறுதியாக நின்றதால் அதிருப்தி அடைந்த தினகரன் அந்த அதிருப்தியை பேட்டிகளில் வெளிப்படுத்தி இருந்தார். பழனிசாமியுடன் கூட்டணி போறதுக்கு பதில் தூக்கு மாட்டி தொங்கிட்டு போகலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் வெடித்திருந்தார். அப்படிப்பட்ட தினகரன் இன்றைக்கு என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ளார்.
இதை பழனிசாமி வரவேற்றிருக்கிறார். அதற்கு தினகரன் நன்றி சொல்லி இருக்கிறார். இது என்ன கூத்து? என்று கேட்டால், ‘அது போன மாசம் இது இந்த மாசம்’ என்ற வடிவேல் காமெடி போல், ‘’எங்களுக்குள் இருப்பது பங்காளிச்சண்டைதான். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை’’ என்று அந்தர்பல்டி அடிக்கிறார்.

அநேகமாக, அரக்கனுக்கு நன்றி சொன்ன தினகரன்! என்று கூட செய்திகள் பரவலாம்.



