ஆளுநர்களின் அதிகாரம் குறித்த உரிமைப் போர் இன்னும் முடியவில்லை. மக்களாலும் தேர்ந்தெடுக்கப்படாமல், மக்கள் பிரதிநிதிகளாலும் தேர்ந்தெடுக்கப்படாமல் வெறும் நியமனத்தால் ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக இருப்பவர் ஆளுநர். மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்குத்தான் அதிகாரம் என்பதை நமது அரசமைப்பு சட்டம் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து இன்றுவரை சர்ச்சையே நீடிக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை ஆகியவற்றின் முடிவை ஆளுநரால் நிராகரிக்க முடியுமா? கிடப்பில் போட்டு வைக்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு தொடர்பாக, இந்திய குடியரசுத் தலைவர் சில விளக்கங்களைக் கேட்டு கேள்விகளை முன்வைத்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய உத்தரவிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என்றும், அதே நேரத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் அல்லது அமைச்சரவையின் கருத்து குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கோ, குடியரசு தலைவருக்கோ காலவரம்பு நிர்ணயிக்க முடியாது எனத் தெரிவித்தது. தீர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய அரசியல் சட்டம் பல முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த சர்ச்சையில் தீர்வு காணும் வகையில் தேவைப்படும் திருத்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மத்திய அரசு தனது அதிகாரத்தை மாநிலங்களின் மீது செலுத்துவதற்கு ஆளுநர் என்ற பதவி தேவைப்படுவதுதான் இதற்கான முதன்மை காரணம்.
மாநிலங்களில் ஆளுநரின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனியாக துணை வேந்தர் உண்டு. மாநிலத்தில் உள்ள அத்தனை பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக இருப்பவர் ஆளுநர்தான். அத்துடன், துணைவேந்தர்களாக யாரை நியமிப்பது என இறுதி முடிவெடுப்பதும் ஆளுநராகவே இருப்பதால், இதில் அதிகார அத்துமீறல்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. மாநில அரசின் சார்பில் துணைவேந்தர்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் பெயர்களை ஆளுநர் நிராகரிப்பதும், துணைவேந்தர்கள் தேர்வுக்காக மாநில அரசு நியமிக்கும் குழுவை ஆளுநர் கலைப்பதும், கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இனி முதலமைச்சரே வேந்தராக இருப்பார் என்றும், அவரே துணைவேந்தர்களை இறுதி முடிவு செய்வார் என்றும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. பொதுவான தீர்மானங்களுக்கே ஒப்புதல் அளிக்காத ஆளுநர், தன்னுடைய வேந்தர் பதவியைப் பறிக்கும் சட்டமுன்வடிவுக்கு ஆதரவளிப்பாரா? வழக்கம் போல கிடப்பில் போட்டார். தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. அங்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பல்கலைக்கழகங்கள் தொடர்பான தமிழ்நாடு அரசின் தீர்மானங்களை ஏற்றுத் தீர்ப்பளித்தது. இதனால், தமிழ்நாட்டில் இனி பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற நிலை வந்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இது தொடர்பான ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு எடுத்தது. கோடை விடுமுறையில் அவரசமாக விசாரணைக்கு எடுக்கப்பட்டு, பல்கலைக்கழகங்களில் ஆளுநரின் அதிகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிடுவதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து சட்டரீதியான பல விவாதங்கள் ஊடகங்களில் நடைப்பெற்று வந்தன.(Online Tamil News)
எதுவும் அரசியலாகப் பார்க்கப்படும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் பங்குக்கு, துணைவேந்தர்களை நியமிக்காமல் தி.மு.க. அரசு வழக்குகளைப் போட்டு, இந்தியாவின் பெரிய வக்கீல்களை ஆஜராக செய்து, உயர்கல்வியில் மாணவர்களின் வளர்ச்சியைக் கெடுப்பதாக அறிக்கை விடுத்தார். அதாவது, பல்கலைக்கழகங்களில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பதற்கான வழக்கை, முன்னாள் முதலமைச்சரான பழனிசாமி ஏற்கவில்லை. ஆளுநர்தான் அதிகாரமிக்கவர் என்ற குரலே அவரது அறிக்கையில் மேலோங்கி இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இது குறித்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் அளித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வளவு முக்கியமான வழக்கை கோடை விடுமுறையில் அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசரமென்ன என்றும் நீதிபதிகளை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நிலைநாட்டப்பட்டால்தான் உண்மையான கூட்டாட்சி முறையில் நாடு இயங்கும். ஆளுநர்களைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு நினைத்தால் இந்த ஜனநாயகப் போர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
தலையங்கம் : ஜனநாயக உரிமைப் போர்



