நாட்டில் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், நகைகளுக்காகத் திருடர்கள் எந்த எல்லைக்கும் செல்லும் துணிச்சலான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தானில் 90 வயது மூதாட்டி ஒருவரை திருடர்கள் கட்டிலோடு கடத்திச் சென்று, அவரது வெள்ளி நகைகளை (silver jewelry) கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன?
ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் பில்வாரா மாவட்டத்தின் அர்வாட் பகுதியில் உள்ள கோதியா கிராமத்தில், தனது வீட்டின் வெளிப்பகுதியில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மேலும், அவர் கால்களில் கனமான வெள்ளி காப்புகளை அணிந்திருந்துள்ளார். அப்பொழுது, நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளையர்கள், மூதாட்டியை எழுப்பினால் அவர் சத்தம் போட்டு விடுவார் என்று அஞ்சி அவர் படுத்திருந்த கட்டிலை அப்படியே தூக்கிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்திற்குச் தூக்கி சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ஆளில்லாத இடத்திற்கு மூதாட்டியைக் கொண்டு சென்ற திருடர்கள், அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மூதாட்டியின் காலில் இருந்த வெள்ளி காப்புகளை வெட்டி எடுத்துள்ளனர். இதில் மூதாட்டிக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, நகைகளைத் திருடிய பிறகு, மூதாட்டியை அங்கேயே விட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.(Online Tamil News)
இதனையடுத்து மறுநாள் காலை வெகுநேரமாகியும் மூதாட்டியைக் காணாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரைத் தேடிச் சென்றுள்ளனர். அப்போது ஊருக்கு வெளியே காயங்களுடன் கிடந்த மூதாட்டியைக் கண்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நள்ளிரவில் மூதாட்டியை கட்டிலோடு தூக்கிச் சென்று நகைகளைத் திருடிய இந்த துணிகரச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


