ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 65 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் குமார் என்பவரை, மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) அல்லது சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ரெட் பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்தின் பீச்ராஃப்ட் C90 ரக விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. நேற்று மாலை சுமார் 7:11 மணியளவில் ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து இந்த ஏர் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே, அதாவது 7:34 மணியளவில், சத்ரா மாவட்டத்தின் சிமாரியா வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அந்தச் சமயத்தில் அந்தப் பகுதியில் மிக மோசமான வானிலை நிலவியதாகவும், பலத்த காற்றுடன் கூடிய இடி, மின்னல் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து, கிராம மக்களின் உதவியுடன் நள்ளிரவில் விபத்து நடந்த இடத்தை அடைந்த போலீசாரும் மீட்புப் படையினரும், விமானம் முழுமையாக உருக்குலைந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும்,விமானத்தில் இருந்த நோயாளி சஞ்சய் குமார், அவரது உதவியாளர்கள் அர்ச்சனா தேவி மற்றும் துருவ் குமார், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா, மருத்துவ உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா மற்றும் விமானிகளான கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவராஜ்தீப் சிங் ஆகிய 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து, சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்ரா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்து குறித்து விசாரணை நடத்த விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) ஆகியவற்றின் சிறப்புக் குழுக்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. முதற்கட்ட ஆய்வில் மோசமான வானிலை காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும், விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா அல்லது எரிபொருள் கசிவு காரணமாகத் தீ விபத்து நேரிட்டதா என்பது கருப்புப் பெட்டி (Black Box) ஆய்வுக்குப் பின்னரே உறுதி செய்யப்படும். ஜார்க்கண்ட் முதலமைச்சர் இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.(Online Tamil News)


