இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள டெர்னேட் நகருக்கு அருகே இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனாடோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதுடன், ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி நிலவியது. குறிப்பாக டெர்னேட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல வீடுகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் சேதமடைந்தன.முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அடுத்தடுத்து உணரப்பட்டதால், மக்கள் பாதுகாப்பிற்காகத் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளிலும் திறந்தவெளிகளிலும் தஞ்சமடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து, நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாகச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிதுங் மற்றும் வடக்கு மினஹாசா போன்ற கடலோரப் பகுதிகளில் கடல் மட்ட உயர்வுடன் சிறிய அளவிலான அலைகள் காணப்பட்ட போதிலும், சில மணிநேரங்களுக்குப் பிறகு சுனாமி ஆபத்து நீங்கியதாகக் கூறி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி இத்தகைய இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.(Online Tamil News)


