தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என்று என்னதான் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும் டெல்லி பாஜக தலைமைதான் என்பது எப்போதே வெட்டவெளிச்சமாகி விட்டது. அதனால்தான் இன்றைக்கு கூட திருச்சி பிரச்சாரத்தின் போது, டெல்லி ஓனரின் கொல்லைப்புற கள்ளக்கூட்டணி பாதி காவிக்கூட்டணி என்று விமர்சிக்கிறார் தவெக தலைவர் விஜய்.
டெல்லி எடுக்கின்ற முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பு மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வழங்கப்பட்டிருக்கிறது…? என்றால் வழங்கும் அதிகாரம் டெல்லிக்குத்தான் உண்டு என்பதே நிதர்சனம்.

கூட்டணி ஆட்சிதான் என்பதை ஆரம்பத்திலேயே உறுதிப்படுத்தி விட்டார் அமித்ஷா. அதன்படி என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றால் எல்.முருகனை துணை முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் அமித்ஷா.
மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் தமிழ்மாநில அரசியலில் களமாட வேண்டும் என்று விரும்புகிறார் அமித்ஷா. அருந்ததியர் சமுதாயத்தை எல். முருகன் எளிதில் வெல்லும் வகையில் ஒரு தொகுதியை தேடியபோதுதான் அவிநாசியை டிக் செய்திருக்கிறார் அமித்ஷா. அருந்ததியர் மக்கள் அ திகம் வாழும் தொகுதி அவிநாசி. அதிமுகவின் வெற்றி தொகுதியாகவும் உள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபால் இந்த தொகுதியில் தொடர்ந்து வென்று வருகிறார். அந்த வகையிலும் நிச்சய வெற்றி என்பது தெரிந்ததால்தான் டெல்லியில் நடந்த தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அவிநாசியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் அமித்ஷா.

அமித்ஷா போட்ட இந்த திட்டத்தில்தான் எல்.முருகன் அவிநாசியில் களமிறங்குகிறார். அந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தனபாலுக்குதான் ஏகப்பட்ட வருத்தம். தன் வெற்றி தொகுதி பறிபோனது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த தேர்தலில் நிற்க சீட் கிடைக்கவே இல்லையே என்கிற ஆதங்கம் ஒருபக்கம் அவரது மகன் மூலமாக புலம்பித்தீர்த்து வருகிறார்.



