மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், பஹ்ரைனில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) தரவு மையத்தின் மீது ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவற்படை, மத்திய கிழக்கில் உள்ள மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைப்பதாக எச்சரித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலால் அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தாக்குதலுக்கு உள்ளான நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதல் காரணமாக பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் வங்கிச் சேவைகள், டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் மொபைல் செயலிகள் செயலிழந்தன. குறிப்பாக அபுதாபி கமர்ஷியல் வங்கி உள்ளிட்ட முக்கிய நிதி நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள் முடங்கியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அமேசான் நிறுவனம் தனது பஹ்ரைன் பிராந்திய சேவைகள் “தடைபட்டுள்ளதை” உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக இத்தகைய தாக்குதல் அமேசான் மையத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகள் பாதுகாப்பான இடம்தானா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலுக்குப் பதிலடியாகவே ஈரான் இத்தகைய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப இலக்குகளைத் தாக்குவதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.(Online Tamil News)


