ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வரும் போர்ச் சூழலில், அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க விமானப்படைக்கு ஏற்பட்ட மிக மோசமான பாதிப்பாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தில், ஈரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகிள் மற்றும் A-10 வார்ட்ஹாக் ஆகிய இரண்டு விமானங்கள் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு விமானம் மத்திய ஈரானிலும், மற்றொரு விமானம் பாரசீக வளைகுடா பகுதியிலும் விழுந்து நொறுங்கியுள்ளன.

இந்தத் தாக்குதலின் போது F-15E விமானத்தில் இருந்த இரண்டு வீரர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு வீரரின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. முன்னதாக, ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விமானங்களை மீட்டெடுக்கச் சென்ற மீட்புப் படைகளின் ஹெலிகாப்டர்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளதது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், குவைத்தின் எண்ணெய் கிணறுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதே வேளையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கிய இலக்குகளை நோக்கித் தங்கள் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதுவரை இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நவீன போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


