சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது என்கிற காரணத்தைச் சொல்லி திடீரென்று தாம்பரம் – கடற்கரை இடையே செல்லும் 42க்கும் மேற்பட்ட ரயில்களை நிறுத்திவிட்டது தெற்கு ரயில்வே நிர்வாகம். இதனால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கடந்த 5 தினங்களாக இரவு பகல் முழுவதும் சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, தாம்பரம், செங்கல்பட்டு என்று இந்த வழித்தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. இதில் சிக்கல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் நேருக்கு நேர் வந்து பல மணி நேரம் பயணிகளை அவதிக்கு ஆளாக்குகிறது. நுங்கம்பாக்கம் – சேப்பாக்கம் இடையே ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் நேருக்கு நேர் வந்ததால் கடந்த 20ம் தேதி அன்று இரவு 9.25 மணிக்கு கோடம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட ரயில் பூங்காவுக்கு செல்ல 2 மணி நேரம் ஆகிவிட்டது. 11.44க்குத்தான் பூங்கா ரயில் நிலையம் சென்றது.

கோடம்பாக்கத்தில் இருந்து பூங்கா செல்ல வழக்கமாக 20 நிமிடங்கள் என்றால் இப்போது 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 45, 50 நிமிடங்களுக்கு ஒருமுறைதான் ரயில்கள் வருகின்றன. இதனால் அலுவலகம் செல்பவர்களும், கல்லூரி, பள்ளிக்களுக்கு செல்லும் மாணவர்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஓரிரு நாளோ, ஒரு வாரமோ இல்லை. ஏப்ரல் 5ம் தேதி வரையிலும் தொடரும் என்கிறது ரயில்வே நிர்வாகம்.

இப்போது இருக்கும் நவீன யுகத்தில் கூடுதல் கருவிகள், கூடுதல் ஆட்கள் கொண்டு வெகுவிரைவாக பராபரிப்பு பணிகளை முடித்துவிட முடியும். தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின் மக்கள் தொகை பற்றி தெரிந்திருந்தும் ஒன்றரை மாதங்கள் பராமரிப்பு பணிகளுக்கு எடுத்துக்கொள்கிறார்கள் என்றால் இது நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை காட்டுகிறது என்று பயணிகள் குமுறி வெடிக்கிறார்கள். சென்னை மக்கள் வதை ஒன்றிய அரசுக்கு புரியவில்லையா? என்று வெயிலில் நெரிசலில் வதைபடும் பயணிகள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.



