அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிந்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம் சீட் ஒதுக்குவதில் ஜெயலலிதா எப்படிப்பட்டவர்? என்பது மனம் திறந்துள்ளார்.
’’அரசியல் என்பது கணக்குகளால் ஆனது என்பார்கள். ஆனால், ஜெயலலிதாவின் அரசியல் கருணையால் ஆனது. தேர்தல் நேரங்களில் அவரோடு நான் பயணித்த அந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால பக்கங்கள். இன்றும் அந்த நினைவுகளைத் திரும்பிப் பார்க்கையில், ஒரு தலைவியாக அல்லாமல், தொண்டர்களின் துயர் துடைக்கும் தாயாகவே அவர் என் மனக்கண்ணில் நிற்கிறார்.

ஜெயலலிதா ஒரு ‘பத்திரை மாற்று தங்கம்’. அவரிடம் வேடம் போட முடியாது, உண்மையான விசுவாசத்தை மட்டுமே அவர் அங்கீகரிப்பார். ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்யும் போது, அவரிடம் எவ்வளவு பணபலம் இருக்கிறது என்பதை அவர் ஒருபோதும் அளவுகோலாகக் கொண்டதில்லை. “இவர் நல்லவரா? விசுவாசமானவரா? கட்சிக்காக உழைத்தவரா?” – இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலில் தான் ஜெயலலிதாவின் அங்கீகாரம் ஒளிந்திருக்கும்.
நேர்காணலின் போது, வேட்பாளர்கள் தங்களால் இயன்ற செலவுத் தொகையைச் சொல்லும் போது, ஜெயலலிதா அதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார். ஏனெனில், பணத்தை விடவும் ஒரு தொண்டனின் அர்ப்பணிப்பு பெரியது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு, தலைமை கழகத்தில் இருந்து பல புகார்கள் வரும். “ஜெயலலிதாவிடம் பொய் சொல்லி சீட் வாங்கிவிட்டார், அவரிடம் செலவு செய்ய ஒரு பைசா கூட இல்லை” என்று அங்கு வேலை செய்யும் நிர்வாகிகள் என்னைத் தொடர்பு கொண்டு ஆதங்கப்படுவார்கள். ஆனால், ஜெயலலிதா எதையும் நிதானமாகவே கையாளுவார். யார் என்ன சொன்னாலும், தான் நம்பிய ஒரு தொண்டன் களத்தில் தவிக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார். பொருளாதார வசதி இல்லாத வேட்பாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்களை வெற்றி பெறச் செய்வதில் அவர் காட்டும் அக்கறை ஒரு தாயின் பரிவுக்கு இணையானது.

பணமில்லை என்றாலும், வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் வேட்பாளர்கள் நின்ற அந்தத் தருணங்களை நினைக்கும் போது இன்றும் நெஞ்சம் நெகிழ்கிறது. தன் பலத்தையும் பணத்தையும் ஜெயலலிதா அறிவித்த வேட்பாளருக்காக செலவு செய்த எத்தனையோ கழக நிர்வாகிகள் இருக்கிறார்கள். அப்படி கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்ட அந்த உத்தமர்களை நான் இன்று போற்றி வணங்குகின்றேன்.
அரசியல் சதுரங்கத்தில் எத்தனையோ சூழ்ச்சிகள் இருக்கலாம். ஆனால், ஜெயலலிதாவின் நிழலில் நான் வாழ்ந்த அந்த பயணம் ஒரு போராட்டம் போன்றது. ஒரு மாபெரும் ஆளுமையின் நிழலில், அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்து பணியாற்றியதை ஒரு கடமையாகவோ அல்லது வெறும் வேலையாகவோ நான் பார்க்கவில்லை; அதை என் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுகிறேன். அழியாத சுவடுகளாக என் இதயத்தில் நிலைத்திருக்கும்.’’



