ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக வீடியோவில் பேசி இருக்கிறார் ரஜினி.
அக்கல்லூரியில் 1975 -1979ல் படித்த மாணவர்கள் 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி அது. நேற்று நடந்த அந்த நிகழ்ச்சியில் இக்கல்லூரியில் பயின்ற சைலேந்திரபாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் ரஜினிகாந்தின் சம்பந்தி வணங்காமுடியும் ஒருவர்.

பழைய நண்பர்கள் சந்திக்கும் இந்த நிகழ்ச்சிக்காக ரஜினிகாந்த் ஒரு வீடியோவை அனுப்பி வைத்திருக்கிறார். அதில் அவர், ‘’வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் பழைய நண்பர்கள் கிடைப்பது அபூர்வம். நாம் பெரியவராக வளர்ந்ததும் சார், அப்பா, தாத்தா என்று மரியாதையாக எத்தனையோ பேர் கூப்பிட்டாலும் கூட, ‘டேய்’ என்று பழைய நண்பன் சொல்லும்போது அதுல இருக்குற சந்தோஷசமே தனிதான்.

அதனாலதான் நான் எந்த வேலையில இருந்தாலும் 6 மாசத்துக்கு ஒரு முறை பழைய பஸ் கண்டக்டர், டிரைவர் நண்பர்களைப் பார்க்க பெங்களூரு போயிடுவேன். என்னுடைய சிவாஜி என்கிற ஒரிஜினல் பெயரை நானே மறந்துட்டேன். ஆனா அவுங்க என்னை, டேய் சிவாஜின்னு கூப்பிடும்போது அவ்வளவு சந்தோசமாக இருக்கும்’’ என்கிறார்.



