அதிமுக உரிமை மீட்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவா? தவெகவா? என்ற வாக்கெடுப்பில் நிர்வாகிகள் 90 சதவிகிதத்திற்கும் மேல் தவெகவுடன் கூட்டணிக்குச் செல்லலாம் என்று வாக்களித்திருந்தனர்.

ஆனாலும் தவெகவுடன் கூட்டணிக்குச் செல்லாமல் காலம் கடத்தி வந்தார் ஓபிஎஸ். நிர்வாகிகளும் தொண்டர்களும் முடிவைச்சொன்ன பிறகும் கூட ஏன் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார் ஓபிஎஸ் என்று குழப்பத்தில் இருந்தவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து ஆளாளுக்கு ஒரு முடிவு எடுத்து அவர்களுக்கு தோதான கட்சிகள் சென்று சேர்ந்துவிட்டனர்.

உரிமை மீட்புக்குழுவில் ஆலோசகராக இருந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ‘எம்.ஜி.ஆர். அதிமுக’ வை தொடங்கி இருக்கிறார். அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரையும் ’எம்.ஜி.ஆர். அதிமுக’வுக்கு கொண்டு வரும் முயற்சியில் உள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கையாக தவெகவுடன் முறைப்படி கூட்டணி அமைப்பதற்காக முயற்சிகளை எடுக்கவிருக்கிறார். முறைப்படியாக என்றால், தவெகவுடன் கூட்டணி அமைப்பது என்று பேசி முடித்த பின்னர்தான் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள்.
வரும் 23ல் காஞ்சிபுரத்தில் நடக்கவிருக்கும் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டத்திற்கு பின்னர் இந்த கூட்டணி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.



