உலகின் முண்ணனி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle), உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது ஒட்டுமொத்த டெக் உலகையும் உலுக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு இந்த செய்தி பெரும் இடியாக இறங்கியுள்ளது.

இந்தியாவில் மட்டும் சுமார் 12,000 ஊழியர்கள் வேலையை இழந்துள்ள நிலையில், இது அங்குள்ள ஆரக்கிள் பணியாளர்களில் ஏறத்தாழ 40 சதவீதமாகும். பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அதிகாலை வேளையில் மின்னஞ்சல் மூலம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட விதம், பணியாளர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் முதல் புதியவர்கள் வரை அனைவரையும் பாதித்துள்ளது.
இந்த மாபெரும் பணிநீக்கத்திற்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிறுவனம் தற்போது தனது கவனத்தை முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன கிளவுட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சேவைகளின் பக்கம் திருப்பியுள்ளது. புதிய தரவு மையங்களை (Data Centres) உருவாக்குவதற்கும், ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கும் பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு தேவைப்படுவதால், மனிதவளச் செலவைக் குறைப்பதன் மூலம் நிதியைத் திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளுக்காகப் பெருமளவு கடன் வாங்கியுள்ளதாகவும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் அழுத்தத்தைச் சமாளிக்க இத்தகைய கடினமான முடிவை ஆரக்கிள் எடுத்துள்ளதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இந்திய ஊழியர்களுக்கு ஒரு மாத நோட்டீஸ் கால ஊதியம் மற்றும் அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டிற்கும் 15 நாட்களுக்கான ஊதியம் உள்ளிட்ட சில நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் ஒரே நேரத்தில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவது இந்திய ஐடி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
மேலும், இது முதற்கட்ட பணிநீக்கம் மட்டுமே என்றும், வரும் மாதங்களில் அடுத்தடுத்த கட்டங்களாக மேலும் பல ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் வெளியாகும் தகவல்கள் டெக் துறையினரிடையே அச்சத்தை அதிகரித்துள்ளன.(Online Tamil News)


