பொங்கல் என்பது தமிழர்களின் மிக முக்கியமான பாரம்பரிய திருவிழா. இது வெறும் ஒரு மத விழா மட்டும் அல்ல. பயிர் செய்யும் மக்களின் உழைப்பை மதிக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லும், மனிதர் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களையும் மதிக்கும் ஒரு பண்பாட்டு விழாவாக பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. (Pongal 2026)
பொங்கல் விழா எப்போது தொடங்கியது என்ற கேள்விக்கு வரலாற்றுச் சான்றுகளுடன் விளக்கம் அளிக்கிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞரும், அண்ணா கலை அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியருமான ரமேஷ். அவர் பிபிசி தமிழிடம் பேசியதில், கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலேயே பொங்கல் அல்லது சங்கராந்தி திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
பேரரசன் இராஜராஜ சோழனின் பாட்டன் அரிஞ்சய சோழன் கி.பி. 956-957 காலத்தில் ஆட்சி செய்தார். அவருடைய மனைவி கல்யாணி தேவி (வீமன் குந்தவை என்றும் அழைக்கப்படுகிறார்). இந்த அரசியைப் பற்றிய மூன்று கல்வெட்டுகள் இன்று கிடைக்கின்றன. அந்த மூன்று கல்வெட்டுகளிலும் அவர் கோயில்களுக்கு வழங்கிய அறக்கொடைகள் பற்றிய தகவல்கள் உள்ளன.(Online Tamil News)

கி.பி. 968-ஆம் ஆண்டு, சுந்தர சோழன் ஆட்சிக் காலத்தில், கல்யாணி தேவி உடையார்குடி என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு ஒரு முக்கியமான அறக்கொடை வழங்கியுள்ளார். சங்கராந்தி நாளில் அந்த கோயிலில் உள்ள “திரு நந்தீசுவரத்துப் பரம சுவாமி”க்கு திருமுழுக்கு (புனித நீராடல்) செய்ய ஆயிரம் குடம் நீர் கொண்டு வருபவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பதற்காக, ஒன்றரை ‘மா’ நிலத்தை கோயிலுக்கு தானமாக அளித்துள்ளார். இதன் மூலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சங்கராந்தி திருநாள் கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை அறிய முடிகிறது.
மேலும், கண்டராதித்த சோழரின் மனைவியான செம்பியன் மாதேவி, தம் மகன் உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள செம்பியன் மகாதேவி சதுர்வேத மங்கலத்தில் கைலாசமுடைய மகாதேவருக்காக ஒரு கற்கோயிலை கட்டினார். அந்தக் கோயிலில் சங்கராந்தி நாளில் திருமுழுக்கு, நந்தா விளக்கு ஏற்றுதல் மற்றும் நூறு பிராமணர்களுக்கு பொங்கல் சோறு வழங்குவதற்காக நன்செய் நிலத்தை தானமாக அளித்துள்ளார்.
இந்த கல்வெட்டுகளில் “உத்தராயண சங்கராந்தி” என்றும் “பொங்கல் சோறு” என்றும் குறிப்புகள் வருகின்றன. இதனால் பொங்கல் விழா கோயில்களிலும் ஒரு முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டதை உறுதியாகச் சொல்லலாம்.
சோழர் காலத்தில் சங்கராந்தி விழாவாக இருந்த பொங்கல், விஜயநகர பேரரசின் காலத்தில் மேலும் பெரிய விழாவாக வளர்ந்திருக்கலாம். பின்னர் தஞ்சை மராட்டியர் ஆட்சிக் காலத்தில், மகர சங்கராந்தி நாளில் வாழை கட்டி, பொங்கல் வைத்து கொண்டாடியதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இதனால், பொங்கல் விழா ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்டது என்றும், அது தமிழர்களின் வாழ்வியல், விவசாயம், பண்பாடு ஆகியவற்றோடு ஆழமாக இணைந்தது என்றும் தெளிவாகிறது.


